

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பரங்குன்றத்தில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நடப்பட்ட சர்வே தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டுமென வலதுசாரி அமைப்பை சேர்ந்த சிலர் வற்புறுத்தி வருகின்றனர்.
நீதிமன்றத்திலும் வழக்குகளை தொடர்ந்துள்ளனர். அந்த சர்வே தூணில் தீபம் ஏற்றுவதன் மூலம் அப்பகுதியில் முன்பிருந்தே இருந்து வந்த சிக்கந்தர் தர்காவை அகற்றி, மத நல்லிணக்கத்தை சீர்குலைத்து, மக்களை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் அடைய வேண்டும் என்று அவர்கள் நினைக்கின்றனர்
இதன் தொடர்ச்சியாக திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தமிழக அரசு தனது நிலைப்பாட்டை வரும் 22-ம் தேதிக்குள்தெரிவிக்க வேண்டுமென, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றத்தை பயன்படுத்தி, அரசியல் சட்டத்துக்கு முரணான தீர்ப்புகள் மற்றும் உத்தரவுகளின் மூலம் சர்வே தூணில் தீபம் ஏற்றலாம் என்ற கருத்தை அடிப்படையிலேயே அரசு நிராகரிக்க வேண்டும்
இத்தகைய முயற்சி நமது அரசியல் சட்டத்துக்கும், மதச்சார்பற்ற விழுமியங்களுக்கும், மத நல்லிணக்கத்திற்கும் எதிரானதாகும். எனவே, திருப்பரங் குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு கடந்த காலத்தில் மேற்கொண்ட சரியான நிலையை இப்போதும், எதிர்காலத்திலும் உறுதியோடு முன்னெடுக்க வேண்டும்.
வலதுசாரி சார்புடைய நீதிபதிகளின் அழுத்தத்துக்கு அடிபணியாமல் திருப்பரங்குன்றம் சர்வே தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்க கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.