

சென்னை: கோவிலம்பாக்கம் எஸ்.கொளத்தூரில் வசிப்பவர் நிஷாந்தி (36). இவர் தனது தோழியுடன் சேர்ந்து அதே பகுதியில் உடற்பயிற்சிக் கூடம் (ஜிம்) நடத்தி வருகிறார்.
ஈசா பல்லாவரத்தைச் சேர்ந்த சிவக்குமார் (36) என்பவர் கடந்த 2019-ம் ஆண்டு முதல் இங்கு பயிற்சியாளராக வேலை செய்து வந்தார். வரவு, செலவு பொறுப்புகளை இவரே கவனித்து வந்தார்.
இந்த நிலையில், நிஷாந்தி கடந்த மே மாதம் கணக்கு பார்த்தபோது, ரூ.48 லட்சம் வரை மோசடி நடந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சிவக்குமாரிடம் கேட்ட நிலையில், வேலையில் இருந்து அவர் நின்றுவிட்டார்.
இதையடுத்து, மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் நிஷாந்தி புகார் கொடுத்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.
இதில், வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கும் மாத சந்தா தொகையை உடற்பயிற்சிக் கூடத்தின் கணக்கில் செலுத்தாமல், மனைவி மற்றும் தனது வங்கிக் கணக்கில் சிவக்குமார் வரவு வைத்து மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவரை போலீஸார் கைது செய்தனர்.