

சென்னை: ஓடும் பேருந்தில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பெண் பயணிகளை குறிவைத்து செல்போன் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்தவர் திலகம் (42).
ஓட்டேரியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் செல்ல கடந்த 3-ம் தேதி இரவு, புரசைவாக்கம், மோட்சம் திரையரங்கம் பேருந்து நிறுத்தத்திலிருந்து மாநகர அரசுப் பேருந்தில் (தடம் எண்.29ஏ) ஏறி பயணித்துக் கொண்டிருந்தார். சிறிது தூரத்தில் ஓட்டேரி பாலம் அருகே அவரது பையில் வைத்திருந்த, செல்போனை யாரோ திருடிவிட்டது தெரியவந்தது.
அவர் கூச்சலிட்டு செல்போன் திருடுபோனதை தெரிவித்தார். இதையடுத்து பேருந்து சாலையோரம் நிறுத்தப்பட்டது. பேருந்தில் இருந்த மற்ற பயணிகளும் அவர்களது செல்போன்களை சரிபார்த்தனர். அப்போது அதே பேருந்தில் பயணம் செய்த மேலும் 2 பெண்களின் செல்போன்களும் திருடுபோனது தெரிந்தது.
இதையடுத்து, பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இருவரும் சேர்ந்து பயணிகள் உதவியுடன் பேருந்திலிருந்து செல்போன் திருடர்கள் வெளியேற முடியாதவாறு தடுப்பு அமைத்து பேருந்தில் இருந்த பயணிகள் ஒவ்வொருவரிடமும் சோதனை செய்தனர். தகவல் அறிந்து ஓட்டேரி போலீஸாரும் சம்பவ இடம் விரைந்து சோதித்தனர்.
இதில் செல்போன் திருட்டில் ஈடுபட்ட பெரம்பூர் முனியப்பன் தெருவைச் சேர்ந்த பழனி (36), அவரது மனைவி ஜமுனா (24), மதுரவாயல் சீமாத்தம்மன் நகரைச் சேர்ந்த குப்பன் (42), பாலு என்ற சொரி பாலு (39) ஆகியோர் பிடிபட்டனர்.
விசாரணையில் இவர்கள் 4 பேரும் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி மேலும் சிலருடன் கூட்டு சேர்ந்து பயணிகளோடு பயணிகளாக அரசுப் பேருந்தில் ஏறி சக பயணிகளின் செல்போன்களை திருடிச் செல்வதும், அந்த செல்போன்களை ஓரிடத்தில் மறைத்து வைத்துள்ளதும் தெரியவந்தது.
அதன்பேரில் அவர்கள் மறைத்து வைத்திருந்த 14 செல்போன்கள் மீட்கப்பட்டன. பழனி மீது 2 குற்ற வழக்குகளும், பாலு மீது 2 கொலை முயற்சி, திருட்டு, வழிப்பறி என 12 குற்ற வழக்குகளும், குப்பன் மீது திருட்டு, வழிப்பறி என 14 குற்ற வழக்குகளும் உள்ளது தெரியவந்தது. தலைமறைவாக உள்ள இவர்களது கூட்டாளிகளை போலீஸார் தொடர்ந்த தேடி வருகின்றனர்.