

சென்னை: மதுபான பாட்டில்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை தடுக்க, காலி மதுபான பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை நடைமுறைப்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி நீலகிரியில் முதலில் அமல்படுத்தப்பட்ட இத்திட்டத்தை தமிழகம் முழுவதும் செயல்படுத்த நீதிமன்றம் அறிவுறுத்தியது. தற்போது 21 மாவட்டங்களில் இத்திட்டம் அமலில் உள்ளது.
இந்நிலையில், சென்னையில் இன்று (6-ம் தேதி) முதல் இந்த திட்டம் அமலாக உள்ளது. இந்த திட்டத்தின்படி, மதுபாட்டில்களை வாங்கும் போது மதுபாட்டில் ஒன்றுக்கு ரூ.10 கூடுதலாகப் பெற்று மது அருந்திவிட்டு, காலி மதுபாட்டில்களைத் திரும்ப அதே மதுபானக் கடையில் ஒப்படைக்கும் போது, ஏற்கனவே செலுத்திய ரூ.10-ஐ திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
இதனால் கூடுதல் பணிச்சுமை ஏற்படும், காலி பாட்டிகளை சேமிக்க கடைகளில் போதிய இடம் இல்லை. இந்த திட்டத்துக்காக கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்று டாஸ்மாக் பணியாளர்கள் கூறுகின்றனர்.