

சென்னை: விவசாயப் பொருட்களை ஏற்றுமதி செய்து அதிக லாபம் தருவதாகக் கூறி சுமார் ரூ.1,417 கோடி நிதி மோசடியில் ஈடுபட்ட ‘யூனிக் எக்ஸ்போர்ட்ஸ்’ நிறுவனத்தைச் சேர்ந்த இருவரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
ஈரோட்டைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிய ‘யூனிக் எக்ஸ்போர்ட்ஸ்’ நிறுவனத்தின் உரிமையாளர் எஸ். நவீன் குமார் மற்றும் அவரது கூட்டாளிகள், விவசாய விளைபொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் பெரும் லாபம் ஈட்டித் தருவதாகக் கூறி முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாயை வசூலித்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இவ்வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்திருப்பது தெரியவந்ததை அடுத்து, அமலாக்கத்துறை தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணையில் இறங்கியது.
இதன் தொடர்ச்சியாக, கடந்த ஜூன் 16, 17 ஆகிய தேதிகளில் அந்நிறுவனத்துடன் தொடர்புடைய 9 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
விசாரணையில், ‘யூனிக் எக்ஸ்போர்ட்ஸ்’, ‘ஈஸ்ட் வேலி அக்ரோ ப்ரிம்ஸ்’ போன்ற நிறுவனங்களின் பெயரில் பல்வேறு முதலீட்டுத் திட்டங்களை உருவாக்கி, சுமார் 35,759 முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.1,417.86 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது அம்பலமானது.
இந்த நிறுவனம் போலியான ஏற்றுமதி லாபத்தைக் காட்டியே தொடர்ந்து முதலீட்டாளர்களிடம் பணம் பறித்ததும் தெரியவந்தது.
நிறுவனத்தில் வெறும் 4 பேர் மட்டுமே பணிபுரிந்த நிலையில், அவர்களுக்குச் சம்பளமாக ரூ.390.90 கோடி வழங்கப்பட்டதாகக் கணக்குக் காட்டியுள்ளனர்.
விவசாயப் பொருட்கள் எதுவும் வாங்காமல், வெங்காயம் மற்றும் வணிகப் பொருட்கள் வாங்கியதாக ரூ.79.56 கோடி பொய்க் கணக்கு எழுதியும் நிதியை மறைத்துள்ளனர்.
குறிப்பாக, நிறுவனத்தின் உரிமையாளர் நவீன் குமார், இந்த மோசடித் திட்டங்களின் பின்னணியில் இருந்து வங்கிப் பரிவர்த்தனைகள் மற்றும் முதலீட்டாளர்களின் நிதியை முழுமையாகக் கட்டுப்படுத்திஉள்ளார்.
அவரது கூட்டாளி எஸ். முத்துசெல்வம், முதலீட்டாளர்களைத் திரட்டுவதிலும் நிதியைத் திருப்புவதிலும் முக்கியப் பங்கு வகித்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, நவீன் குமார் மற்றும் முத்துசெல்வம் ஆகிய இருவரையும் அமலாக்கத்துறை கைது செய்தது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இருவருக்கும் 15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.