

சென்னை: ஹவுரா, புவனேஷ்வரில் இருந்து சென்னை எழும்பூருக்கு வந்த வெவ்வேறு விரைவு ரயில்களில் ரூ.7 லட்சம் மதிப்பலான கஞ்சாவை கடத்திய ஒடிசாவைச் சேர்ந்த 4 நபர்களை ஆர்.பி.எஃப் போலீஸார் கைது செய்தனர்.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ஆர்.பி.எஃப் காவல் ஆய்வாளர் கே.பி.செபாஸ்டியன் தலைமையில் உதவி துணை ஆய்வாளர் அன்பு செல்வம், தலைமை காவலர் என்.ராஜேஷ், ஜி.கண்ணன் உள்ளிட்டோர் செவ்வாய்க்கிழமை இரவு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, ரயில் நிலையத்தின் 7-வது நடைமேடைக்கு மேற்கு வங்கம் மாநிலம் ஹவுராவிலிருந்து சென்னை எழும்பூர் வழியாக கன்னியாகுமாரிக்கு செல்லும் சிறப்பு வாராந்திர விரைவு ரயில் வந்தது. அந்த ரயிலில் இறங்கி வந்தவர்களை கண்காணித்தபோது, 3 பேர் மீது ஆர்.பி.எஃப் போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர்களை பிடித்து, அவர்களின் பைகளை சோதித்தபோது, 6 கிலோ எடைக்கொண்ட கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. இதன் மதிப்பு ரூ.3 லட்சம்.
இதையடுத்து, அவர்களை ஆர்.பி.எஃப் அலுவலகத்துக்கு அழைத்து விசாரித்தபோது, அவர்கள் ஒடிசாவைச் சேர்ந்த ரமேஷ் நாயக் (45), ராஜ்குமார் நாயக்(43), கபிராஜ் பிரவ் (42) ஆகியோர் என்பதும், ஒடிசா மாநிலம் பிரம்மபூர் இருந்து கஞ்சா பொட்டலங்களை எடுத்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதுபோல, எழும்பூர் ரயில் நிலையத்தில் 9-வது நடைமேடைக்கு இன்று காலை, புவனேஷ்வர் - புதுச்சேரிக்கு செல்லும் விரைவு ரயில் இன்று காலை வந்தது. இதிலிருந்து இறங்கி வந்த ஒரு பயணியை நிறுத்தி சோதித்தபோது, அதில் 8 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. இதன் மதிப்பு ரூ.4 லட்சம் ஆகும்.
இதையடுத்து, அவரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் ஒடிசாவைச் சேர்ந்த லக்ஷிமிதர் தாஸ் (39) என்பதும், ஒடிசாவில் இருந்து கஞ்சா பொட்டலங்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட 4 நபர்கள் மற்றும் கஞ்சா பொட்டலங்களை மேல் நடவடிக்கைக்காக போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.