

சென்னை: வேளச்சேரி வங்கியில் ரூ.1.50 கோடி தங்க நகைகளை விட்டுச் சென்ற வழக்கில் திடீர் திருப்பமாக, முன்னாள் பெண் வங்கி மேலாளரே நகைகளைத் திருடி மீண்டும் வங்கியில் வைக்க முயன்றது தெரியவந்துள்ளது.
சென்னை வேளச்சேரி 100 அடி சாலையில் தனியார் வங்கி ஒன்று செயல்படுகிறது. இந்த வங்கிக்கு கடந்த 5-ம் தேதி பர்தா அணிந்த பெண் ஒருவர், வங்கிக் கணக்கு தொடங்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வெளியே சென்றுள்ளதால், சிறிது நேரம் காத்திருக்கும்படி ஊழியர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, வங்கிக் கணக்கு தொடங்க தேவையான ஆவணங்களை எடுத்து வருவதாகக்கூறி அங்கிருந்து சென்ற பெண் திரும்பி வரவில்லை.
அந்த பெண் அமர்ந்திருந்த இருக்கையில் ஒரு பர்ஸ் இருந்தது. அந்த பர்சை திறந்து பார்த்த போது, தங்க பிஸ்கட், தங்க வளையல் உட்பட 1.256 கிலோ தங்கம் (ரூ.1.50 கோடி மதிப்பு) இருந்தது.
அதை எடுத்து பத்திரப்படுத்திய வங்கி அதிகாரிகள், உடனடியாக தலைமை அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, வங்கியின் தணிக்கை குழுவினர் வந்து சம்பந்தப்பட்ட தங்க பிஸ்கெட் மற்றும் வளையல்களை ஆய்வு செய்தபோது அனைத்தும் தங்கம் என தெரிந்தது.
நேற்று முன்தினம் வரை தங்கத்தை விட்டுச் சென்ற பெண் திரும்ப வராததால் சந்தேகம் அடைந்த வங்கி அதிகாரிகள் வேளச்சேரி காவல் நிலையத்தில் தங்கத்தை ஒப்படைத்து புகார் அளித்தனர்.
இதையடுத்து போலீஸார் சிசிடிவி கேமரா பதிவில் கிடைத்த அந்த பெண் உருவ அடையாளத்தை வைத்து அந்த பெண்ணை தேடினர். இதில் நகையை விட்டுச் சென்றது அதே வங்கியில் கடந்த ஓராண்டுக்கு முன்பு மேலாளராகப் பணியாற்றிய பத்மப்பிரியா (37) என்கிற பத்மகுமாரி என்பது தெரிய வந்தது.
அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர். கடன் தொல்லையால் கணவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து பத்மபிரியாவுக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர். இதையடுத்து, அவர் தான் பணியாற்றிய வங்கி லாக்கரில் வேறொரு நபரின் 250 கிராம் நகைகளை திருடியுள்ளார்.
இந்த வழக்கில் கைதான அவர், ஒரு வாரத்துக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார். இதேபோல் அவர் வேறு ஒரு பெண்ணின் லாக்கரில் இருந்து ஒன்றே கால் கிலோ நகைகளை திருடி வீட்டில் வைத்திருந்த நிலையில், இந்த நகை திருட்டு தொடர்பாக மீண்டும் கைது செய்யப்பட்டு விடுவோமோ என பயந்து, பர்தா அணிந்து வந்து, எப்படியாவது அந்த லாக்கரில் நகையை வைத்துவிடலாம் என முயற்சி செய்ததாகவும், அது முடியாததால், நகைப் பையை விட்டுச் சென்றதும் தெரியவந்தது.