

சென்னை: சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்ல தயாராக இருந்த விமானத்தில் ரூ.20 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணத்தை கொண்டு செல்ல முயன்ற பயணியிடம் இருந்து பணத்தை பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து, சிங்கப்பூர் செல்லும் தனியார் பயணிகள் விமானம் நேற்று அதிகாலை 1.15 மணிக்கு, சென்னையில் இருந்து புறப்பட தயாராகிக் கொண்டிருந்தது.
அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளின் உடைமைகளை விமான நிலைய பாதுகாப்பு படை அதிகாரிகள், பரிசோதித்து விமானத்துக்குள் ஏற அனுப்பிக் கொண்டு இருந்தனர்.
அப்போது ஆஸ்திரேலியா நாட்டு குடியுரிமை பெற்ற, இந்தியரான ராமச்சந்திரன் (38) என்ற பயணி, சிங்கப்பூர் வழியாக ஆஸ்திரேலியா செல்வதற்கு வந்தார். பாதுகாப்பு அதிகாரிகள் ராமச்சந்திரனின், கைப்பையை ஸ்கேனர் மூலம் பரிசோதித்தபோது அதில், வெளிநாட்டு கரன்சி மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரது கைப்பையை பரிசோதித்ததில் ரூ.20 லட்சம் மதிப்பிலான ஆஸ்திரேலிய நாட்டு டாலர் கரன்சி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து பாதுகாப்பு அதிகாரிகள் விசாரித்தபோது, “இந்தப் பணம் ஆஸ்திரேலியாவில் இருந்து தான் வந்தபோது கொண்டு வந்த பணம்” என்று அவர் கூறினார்.
ஆனால் அவர் ஆஸ்திரேலியாவில் இருந்து வரும்போது பணம் கொண்டு வருவதாக டிக்ளேர் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து ரூ.5 லட்சத்துக்கும் அதிகமான வெளிநாட்டு பணம், விமான பயணி எடுத்துச்செல்வதை அனுமதிக்க முடியாது என பாதுகாப்பு அதிகாரிகள் அதை பறிமுதல் செய்து சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.