பர்கூர் அருகே கிரானைட் அதிபரை கடத்திய பெண் உள்பட 5 பேர் கைது - ஹவாலா பணப் பறிமாற்றமா?

கைதான ரம்யா, லெனின், ராஜேஷ், பாபு, பிரபு

கைதான ரம்யா, லெனின், ராஜேஷ், பாபு, பிரபு

Updated on
2 min read

கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே ரூ.28.80 லட்சம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் கிரானைட் அதிபரை கடத்திய பெண் உட்பட 5 பேரை போலீஸார் கைது செய்தனர். ஹவாலா பணப்பரிமாற்றமா என்பது தொடர்பாக சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே ஏ.நாகமங்கலத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (38). இவர் ஜெகதேவி அருகே கிரானைட் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.

கடந்த 31-ந் தேதி முதல் சுரேஷ்குமாரைக் காணவில்லை. இந்நிலையில், அவரது மனைவி கஜலட்சுமியை நேற்று முன்தினம் செல்போனில் தொடர்பு கொண்ட சுரேஷ்குமார், தன்னை பணப் பிரச்சினையில் சிலர் கடத்தி வைத்துள்ளதாக தெரிவித்தார்.

இதுதொடர்பான புகாரின் பேரில், பர்கூர் காவல் ஆய்வாளர் இளவரசன் வழக்குப் பதிவு செய்து விசாரித்தார். மேலும், சுரேஷ்குமாரின் செல்போன் லொகேஷனை ஆய்வு செய்தபோது, பெங்களூருவில் உள்ள தனியார் ஓட்டலில் இருப்பது தெரிந்தது.

<div class="paragraphs"><p>கிரானைட் அதிபர் சுரேஷ்குமார்</p></div>

கிரானைட் அதிபர் சுரேஷ்குமார்

இதையடுத்து, நேற்று அங்கு சென்ற போலீஸார் சுரேஷ்குமாரை மீட்டனர். மேலும், அவரை கடத்தியதாக சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த ரம்யா (26), மயிலாடுதுறை மாவட்டம் அரசூர் லெனின் (43), சென்னை ஆவடி பிரபு (37), திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டி பாபு (38), சென்னை வில்லிவாக்கம் ராஜேஷ் (42) ஆகியோரை கைது செய்தனர்.

இதுதொடர்பாக போலீஸார் கூறியதாவது: கிரானைட் தொழில் அதிபர் சுரேஷ்குமாரின் வங்கிக் கணக்கில் பலர் பணம் செலுத்தி, ரொக்கமாக பெற்றுள்ளனர்.

அதற்கு கமிஷனாக 1 சதவீதம் சுரேஷ்குமார் பெற்றுள்ளார். அதேபோல ரம்யா என்பவர் குடியாத்தத்தைச் சேர்ந்த ஜெகன் என்பவர் மூலம் சுரேஷ்குமாரின் வங்கிக் கணக்கில் ரூ.28.80 லட்சம் அனுப்பியுள்ளார்.

அந்தத் தொகையை பெற ரம்யா கடந்த 31-ம் தேதி பர்கூர் வந்துள்ளார். சுரேஷ்குமார் வங்கியில் பணம் எடுக்க சென்றபோது, ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை அவர் செலுத்தாததால் அவரது வங்கிக் கணக்கு முடக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, ரூ.1 லட்சத்தை ரம்யாவிடம் சுரேஷ்குமார் கொடுத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த ரம்யா மற்றும் அவருடன் வந்த 4 பேரும் சேர்ந்து சுரேஷ்குமாரை காரில் பெங்களூருக்குக் கடத்திச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, அங்கு 5 பேரையும் கைது செய்து அழைத்து வந்துள்ளோம். மேலும், சுரேஷ்குமாரின் வங்கிக் கணக்கில் ஹவாலா பணப் பரிமாற்றம் நடந்துள்ளதா என்பது தொடர்பாகவும், இதற்கு முன்னர் அவரது வங்கிக் கணக்கில் பணம் செலுத்தியவர்கள் விவரம் குறித்தும் சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

<div class="paragraphs"><p>கைதான ரம்யா, லெனின், ராஜேஷ், பாபு, பிரபு</p></div>
குன்றத்தூர் | ஓடும் காரில் இருந்து பெண்ணை தள்ளிவிட்டதால் பரபரப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in