

மதுரை மேலக் கோபுரத் தெருவில் தீ விபத்தில் சேதமடைந்த பழமையான சென்ட்ரல் திரையரங்கம்.
படம் : நா. தங்கரத்தினம்
மதுரை: மீனாட்சி அம்மன் கோயில் மேற்கு கோபுரம் அருகிலுள்ள பழைய சென்ட்ரல் தியேட்டரில் தீ விபத்து ஏற்பட்டது.
மதுரையிலுள்ள பழைய தியேட்டர் களில் சென்ட்ரல் திரையங்கமும் ஒன்று. தற்போது இத்திரையரங்கம் செயல்பாடின்றி முன்பகுதி வாகன நிறுத்துமிடமாகவும், பிளாஸ்டிக் குடோனுக்கும் வாடகைக்கு விடப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்றிரவு கார் பார்க்கிங் பகுதியில் திடீரென தீப்பிடித்து, அருகிலுள்ள பிளாஸ்டிக் குடோனுக்கும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.
தகவல் அறிந்து வந்த திடீர்நகர் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைக்க போராடினர். ஆனால், கட்டுக்குள் அடங்காமல் தொடர்ந்து பற்றி எரிந்ததால், அனுப்பானடி, தல்லாகுளம் தீயணைப்பு நிலையங்களில் இருந்தும் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.
இதையடுத்து, 5-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மூலம் போராடி தீயை அணைத்தனர்.
இதில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஓரிரு கார்கள் சேதமடைந்தன. தீ விபத்து மின்கசிவால் ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.
தீ விபத்தால் வெளியேறிய கரும்புகை அப்பகுதி முழுவதும் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து திடீர்நகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.