

சென்னை: போக்குவரத்து பெண் போலீஸை, போதை ஆசாமி ஆட்டோவில் கடத்திச் சென்ற சம்பவம் மயிலாப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அருகே மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் அங்கு சில பகுதிகள் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளன.
அவ்வாறு ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்ட மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தெற்கு மாடவீதி வழியாக நேற்று முன்தினம் இரவு ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தடையை மீறி வேகமாக வந்தார்.
ஆட்டோ பறிமுதல்: இதை அந்த பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் கவனித்தார். விரைந்து சென்று ஆட்டோவை தடுத்து நிறுத்தினார்.
ஆனால் அந்த ஆட்டோ ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தாமல் தொடர்ந்து வேகமாக சென்று கொண்டிருந்தார். இதையடுத்து ஆட்டோவை தடுத்து நிறுத்தும் வகையில் ஆட்டோவுக்குள் அந்த பெண் காவலர் துணிந்து தாவி ஏறினார்.
ஆட்டோ ஓட்டுநரை நிற்கும்படி, பின் சீட்டில் இருந்தவாறு கண்டித்தார். ஆனால் அந்த ஆட்டோ ஓட்டுநரோ வாகனத்தை இன்னும் வேகமாக இயக்க ஆரம்பித்தார். 2 கிலோ மீட்டர் தொலைவைத் தாண்டியும் ஆட்டோ நிற்காமல் சென்று கொண்டிருந்தது. நிலைமை கை மீறுவதை உணர்ந்த போக்குவரத்து பெண் காவலர் கூச்சலிட்டார்.
இதைப் பார்த்த அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் சம்பந்தப்பட்ட ஆட்டோவை மடக்கி நிறுத்தினர். அதன் பிறகுதான் ஆட்டோ ஓட்டுநர் மது போதையில் இருந்தது தெரிந்தது. இதையடுத்து அவருக்கு அபராதம் விதித்ததோடு, பெண் காவலர் எங்கு ஆட்டோவை தடுத்து நிறுத்தினாரோ அங்கேயே அழைத்துச் சென்று விடும்படி கண்டிப்புடன் தெரிவித்தார்.
இதையடுத்து, ஆட்டோ ஓட்டுநர் பெண் காவலரை அவர் பணியில் இருந்த இடத்திலேயே மீண்டும் அழைத்துச் சென்று விட்டார். பின்னர் ஆட்டோவை பறிமுதல் செய்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.