

கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அருகே தோட்டத்து வீட்டில் தனியாக வசித்த விவசாயியைக் கொன்று, அவரது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சிங்காரப்பேட்டை அருகே ஓபகாவலசை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கண்ணப்பன் (70). இவரது மனைவி சென்னம்மாள் (61). இத்தம்பதி தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கண்ணப்பன் வீட்டின் வெளியேயும், சென்னம்மாள் வீட்டின் உள்ளேயும் உறங்கிக் கொண்டிருந்தனர். இரவு 11 மணியளவில் வீட்டுக்கு வந்த மர்ம நபர் கண்ணப்பனின் தலையில் கல்லை தூக்கிப் போட்டார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்த சென்னம்மாளை மர்ம நபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகில் வசிப்பவர்கள் வருவதைப் பார்த்ததும் மர்ம நபர் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இதையடுத்து, படுகாயம் அடைந்த கண்ணப்பன் மற்றும் சென்னம்மாளை மீட்டு, ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கண்ணப்பன் உயிரிழந்தார்.
சென்னம்மாள் மேல் சிகிச்சைக்காகக் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு வந்த சேலம் சரக டிஐஜி சந்தோஷ் ஹடிமணி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை, துணை காவல் கண்காணிப்பாளர் ராமமூர்த்தி உள்ளிட்டோர் விசாரணை நடத்தினர்.
தடயவியல் நிபுணர்கள் வீட்டில் குற்றவாளியின் கைரேகைகளைப் பதிவு செய்தனர். மேலும், மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. இதுதொடர்பாக சிங்காரப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.