

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள இரண்டு யானைத் தந்தங்களை பறிமுதல் செய்து, 3 பேரை மெரைன் போலீஸார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் அருகே கீழக்கரை கடற்கரையிலிருந்து யானை தந்தம் சட்டவிரோதமான முறையில் கடத்த இருப்பதாக மெரைன் போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் நேற்று (டிச.7) நள்ளிரவு ஆய்வாளர் ஜான்சிராணி தலைமையிலான மெரைன் போலீஸார் கீழக்கரை அடுத்த சிவகாமிபுரம், மீனவர் குப்பம், புதுநகர் உள்ளிட்ட மீனவ கிராமங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது கீழக்கரை கடற்கரை சாலை மாதா கோவில் அருகில் சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த தூத்துக்குடியைச் சேர்ந்த காதர் பாட்சா, சாயல்குடியைச் சேர்ந்த ஹரிகுமார் ஆகியோரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் நான்கு கிலோ எடை கொண்ட இரண்டு பெரிய யானை தந்தங்கள் இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து யானைத்தந்தங்களை பறிமுதல் செய்த போலீஸார், இருவரையும் கீழக்கரை மெரைன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதில் யானை தந்தங்களை ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் அருகே உள்ள காவாகுளத்தைச் சேர்ந்த ஸ்ரீ ராம் என்பவர் விற்பனை செய்வதற்காக கொடுத்து அனுப்பியது தெரிய வந்தது.
அதன்பேரில் காதர்பாட்சா (27), ஹரிகுமார் (28), ஸ்ரீராம் (26) ஆகிய மூவரையும் கைது செய்து, மேல் விசாரணைக்காக ராமநாதபுரம் வனச்சரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில் காவாகுளத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் இலங்கைக்கு கடல் வழியாக கடல் குதிரை, அம்பர், யானை தந்தம், சுறா துடுப்பு போன்ற பொருட்களை கடத்தும் ஏஜெண்டாக செயல்பட்டு வந்தது தெரிய வந்தது.
தற்போது பிடிபட்டுள்ள நான்கு கிலோ எடை கொண்ட யானை தந்தங்களும் இலங்கைக்கு கடத்துவதற்காக கீழக்கரை கடற்கரை கொண்டு வந்தபோது போலீஸாரிடம் சிக்கியுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட யானை தந்தத்தின் மதிப்பு ரூ.1 கோடி இருக்கும் என போலீஸார் தெரிவித்தனர்.