

கோப்புப் படம்
திருத்தணி: திருத்தணி நேரு நகர் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம்(55). இவர் நேற்று முன்தினம் மாரடைப்பால் உயிரிழந்தார். பின்னர் திருத்தணி நகராட்சி நிர்வாகத்துக்குச் சொந்தமான இலவச குளிர்சாதனப் பெட்டியில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. நேற்று மாலை உறவினர்கள், நண்பர்கள், சண்முகத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக குளிர்சாதனப் பெட்டியிலிருந்து மின்சாரம் கசிந்து அருகிலிருந்த பெண்கள் மீது மின்சாரம் பாய்ந்ததில், திருத்தணி அடுத்த காசிநாதபுரத்தைச் சேர்ந்த தேவகி(65) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் தேவகியம்மா(65), செல்வி(60), சாமுண்டீஸ்வரி(60), பஞ்சாமிர்தம்(55), தனலட்சுமி(45) உள்ளிட்ட 10 பெண்கள் மின்சாரம் பாய்ந்ததில் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குளிர்சாதனப் பெட்டியை முறையாக பராமரிக்காமல் பெண்ணின் இறப்புக்குக் காரணமான திருத்தணி நகராட்சியைக் கண்டித்து திருத்தணி - நேரு நகர் 150-க்கும் மேற்பட்டோர் திருத்தணி, சித்தூர் மாநில நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த திருத்தணி ஏ.எஸ்.பி. ஷூபம் திமான் மற்றும் போலீஸார் விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினர். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.