

சென்னை: சென்னை புரசைவாக்கத்தில் குழந்தை இல்லாமல் தனித்து வசித்து வந்த வயது முதிர்ந்த தம்பதிகள் உயிரிழந்தனர். அவர்களுடைய உடல்கள் 5 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டன.
இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். சென்னை புரசைவாக்கம் சரவண பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் தன்ராஜ் (78). இவரது மனைவி சந்திரா (72). இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. இருவரும் வீட்டில் தனியாக வசித்து வந்தனர்.
தன்ராஜ் தனது வீட்டிலேயே சிறிய அளவில் நகைப்பட்டறை நடத்தி வந்தார். வயது மூப்பு காரணமாக முன்பு போல் வேலை செய்ய முடியாததால் அண்மையில் நகைப்பட்டறையை மூடிவிட்டார்.
இதற்கிடையே, மனைவி சந்திராவின் நகைகளை விற்று கிடைத்த பணத்தை வங்கியில் செலுத்தி, அதன்மூலம் கிடைக்கும் வட்டித் தொகையைக் கொண்டு இருவரும் வாழ்க்கை நடத்தி வந்துள்ளனர்.
மேலும், வயது முதிர்வு காரணமாக வீட்டில் சமைக்க முடியாததால், ஓட்டல்களில் உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டு வந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு முதிய தம்பதியின் வீட்டில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது.
இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் கீழ்ப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸார் விரைந்து சென்று பார்த்த போது, வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, ஒரே படுக்கையில் கணவன், மனைவி இருவரும் சடலமாக கிடந்தனர்.
இருவரது உடல்களும் அழுகிய நிலையில் இருந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீஸார், 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகக் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கணவர் தன்ராஜுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மனைவி சந்திராவே செய்து வந்துள்ளார். இந்நிலையில், தன்ராஜ் உயிரிழந்தது கூட தெரியாமல், அவரது உடலுடன் சந்திரா சுமார் 5 நாட்களாக ஒரே படுக்கையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், வயது முதிர்வு காரணமாக சந்திராவுக்கும் உடல்நலப் பாதிப்புகளுடன் மனநலப் பாதிப்பும் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கணவர் இறந்ததை அறிய முடியாத நிலையில் அவர் இறந்திருக்கலாம் எனத் தெரிகிறது.