

தென்காசி: ஆலங்குளம் அருகே திருமண நிகழ்ச்சியில் புகுந்து 6 பேரை வெட்டிவிட்டு தப்பிச் சென்ற சம்பவத்தில் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆலங்குளம் அருகே நேற்று முன்தினம் நெட்டூரில் நடந்த திருமண விழாவில் புகுந்த கும்பல் அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் அங்கு இருந்தவர்களை சரமாரியாக வெட்டியது. இதில், 6 பேர் பலத்த காயமடைந்தனர்.
இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்யக்கோரி நெட்டூரில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க மாவட்டம் முழுவதும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. இதில் 3 சிறுவர்கள் உள்பட 8 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து தென்காசி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி பிரம்மதேசம் பகுதியில் மணிகண்டன் என்பவரை கடந்த 28-ம் தேதி இருசக்கர வாகனங்களில் வந்த கும்பல் வழிமறித்து பணம் கேட்டு மிரட்டி, அவரது இடது கை விரலில் காயம் ஏற்படுத்தியது. அதே கும்பல், வாகைகுளம் பகுதியில் உள்ள சிற்பக்கலை தொழிற்கூட உரிமையாளர் செல்வ கணேசன் என்பவரை மிரட்டி பணம் பறிக்கும் நோக்கத்தில் சென்றது. அங்கு அவர் இல்லாததால், அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தி, பணியாளர் செல்போனை பறித்துச் சென்றனர். வழியில் மேலும் ஒருவரை தாக்கினர்.
இதனைத் தொடர்ந்து, 29-ம் தேதி நெட்டூர் பகுதியில், முன்விரோதம் தொடர்பான தகராறின் காரணமாக இருசக்கர வாகனங்களில் வந்த அதே கும்பல் 6 பேரை தாக்கியது. அங்கிருந்து தப்பிச் செல்லும்போது மானூர் அருகே தெற்குப்பட்டி பகுதியில் அதிவேகமாகச் சென்றுள்ளனர். இதை தட்டிக் கேட்ட முபாரக், அப்துல் ரஹுமான் ஆகியோரையும் தாக்கிவிட்டு தப்பினர்.
இந்த தொடர் தாக்குதல் சம்பவங்கள் குறித்து அம்பாசமுத்திரம், ஆலங்குளம், மானூர் காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவங்களில் தொடர்புடைய 3 சிறார்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள மேலும் சிலரை பிடிக்க போலீஸார் தரப்பில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.