

சென்னை: போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக பெண் காவலரின் கணவரும், மருத்துவ மாணவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சைதாப்பேட்டை தேரடி தெருவில் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸாருடன் இணைந்து, சைதாப்பேட்டை போலீஸார் நேற்று முன்தினம் இரவு கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகப்படும் வகையில் இருசக்கர வாகனங்களுடன் நின்றிருந்த 2 பேரிடம் விசாரித்தனர்.
அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால், அவர்களது உடைமைகளை சோதித்தனர். அதில், ஸ்டாம்ப் வடிவிலான போதைப் பொருள், ஓஜி வகையிலான உயர் ரக கஞ்சா, போதை மாத்திரைகள் ஆகியவை விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, போதைப் பொருள் வைத்திருந்த சைதாப்பேட்டையை சேர்ந்த பிரபாகரன் (27), சேலையூரை சேர்ந்த ஹரிசுதன் (23) ஆகியோரை கைது செய்தனர். இதில், பிரபாகரன் பெண் காவலர் ஒருவரது கணவர் என்பதும், ஹரிசுதன் தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் 4-ம் ஆண்டு படித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.