

கோப்புப்படம்
சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 3-வது வழித்தடத்தில் ஒரு பகுதியாக, அயனாவரம் - பெரம்பூர் வரை 861 மீட்டர் தொலைவிலான சுரங்கப்பாதை பணி வெற்றிகரமாக நிறை வடைந்தது.
சென்னையில் 3 வழித்தடங்களில் 116.1 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இவற்றில் மாதவரம் - சிறுசேரி சிப்காட் வழித்தடமும் (45.4 கி.மீ.) ஒன்று. மாதவரம் பால்பண்ணை பகுதியில் இந்த சுரங்கப்பாதை பணி முதன்முதலாகத் தொடங்கியது.
இதன் ஒருபகுதியாக, அயனாவரம் நிலையத்தில் இருந்து பெரம்பூர் நிலையம் வரையிலான 861 கி.மீ. தொலைவுக்கு கீழ்பாதையில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதற்காக, ‘மேலகிரி’ என்ற சுரங்கம் தோண்டும் இயந்திரம் பயன்படுத்தப்பட்டது.
இந்நிலையில், இப்பணி நேற்று முன்தினம் முடிவடைந்து, ‘மேலகிரி’ இயந்திரம் பெரம்பூரை வெற்றிகரமாக வந்தடைந்தது. இந்த நிகழ்வை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள், டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவன அதிகாரிகள் உற்காகமாகக் கொண்டாடினர்.
இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் இதுவரை 19 சுரங்கம் தோண்டும் பணிகள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளன. சுரங்கம் தோண்டும் இயந்திரமான ‘மேலகிரி’, பெரம்பூர் ரயில் நிலைய தண்டவாளங்கள் மற்றும் நடைமேடைக்கு அடியிலும், அதிக மக்கள் தொகை கொண்ட மற்றும் நெருக்கமான கட்டிடங்கள் நிறைந்த பகுதிகளுக்கு அடியிலும் சுரங்கப்பாதை அமைக்கும் பணியை வெற்றிகரமாக முடித்துள்ளது.
இந்த வழித்தடத்தில் இருந்த 32-க்கும் மேற்பட்ட ஆழ்துளைக்கிணறுகள் முறையாகக் கையாளப்பட்டன. பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில், அக்கிணறுகளுக்கு பதிலாக மாற்றுநீர் ஆதாரங்கள் மெட்ரோ நிர்வாகத்தால் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.