

கொலை செய்யப்பட்ட பிச்சைமுத்து, சந்திரா, கைது செய்யப்பட்ட ஐயப்பன்
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள காரக்கோட்டையைச் சேர்ந்தவர் கலியபெருமாள்(58), வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தேவி(50).
இவர்களது மகன் ஐயப்பன்(32). பொறியியல் பட்டப்படிப்பு படித்துள்ள இவர், வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். மதுப்பழக்கத்துக்கு அடிமையான ஐயப்பனுக்கு கஞ்சா பழக்கமும் இருந்துள்ளது.
இதன் காரணமாக, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 20 நாட்களாக சிகிச்சையில் இருந்த ஐயப்பன், 2 நாட்களுக்கு முன்னர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
இந்நிலையில், அதே ஊரில் வசிக்கும் தனது தாத்தா பிச்சைமுத்து, பாட்டி சந்திரா வீட்டுக்கு நேற்று முன்தினம் இரவு சென்ற ஐயப்பன் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். இதை அறிந்த அவரது தாயார் தேவி, ஐயப்பனை சமாதானம் செய்து, தனது வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார்.
அதன்பின், பிச்சைமுத்து வீட்டுக்கு நேற்று அதிகாலை 5 மணி அளவில் சென்ற ஐயப்பன், அங்கு தூங்கிக் கொண்டிருந்த பிச்சைமுத்து, சந்திரா ஆகியோர் மீது அங்கிருந்த நாற்காலியை தூக்கி அடித்துள்ளார்.
இதில், இருவரும் மயங்கிவிட்டனர். அதன் பின்னர், வீட்டிலிருந்த தேங்காய் எண்ணெயை இருவர் மீதும் ஊற்றி எரித்துள்ளார்.
தகவலறிந்த வடுவூர் போலீஸார் அங்கு சென்று, வீட்டுக்குள் எரிந்தநிலையில் இறந்து கிடந்த பிச்சைமுத்து, சந்திரா ஆகியோரின் உடல்களை மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர், ஐயப்பனை கைது செய்தனர். தாத்தா, பாட்டியை பேரன் எரித்துக்கொன்ற சம்பவம் மன்னார்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.