

சென்னை: காசோலை மோசடி வழக்கில் திரைப்பட இயக்குநர் லிங்குசாமி உள்ளிட்ட இருவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் லிங்குசாமிக்கு சொந்தமான திருப்பதி பிரதர்ஸ் ஃபிலிம் மீடியா நிறுவனம் பேஸ்மேன் ஃபைனான்ஸ் என்ற நிறுவனத்திடமிருந்து 2016-ம் ஆண்டு ரூ.35 லட்சம் கடன் வாங்கியிருந்தது.
இதை திருப்பி செலுத்தாத நிலையில் கடன் தொகை வட்டியுடன் சேர்ந்து ரூ. 48.68 லட்சமாக உயர்ந்தது. இதற்காக லிங்குசாமி அளித்த காசோலை பணமின்றி திரும்பியதால் பேஸ்மேன் நிறுவனத்தின் உரிமையாளரான ராகுல் குமார், சென்னை அல்லிகுளத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் லிங்குசாமி மற்றும் திருப்பதி பிரதர்ஸ் நிறுவன இயக்குநர் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோருக்கு எதிராக 2018-ம் ஆண்டில் காசோலை மோசடி வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாலட்சுமி, குற்றம்சாட்டப்பட்ட இயக்குநர் லிங்குசாமி மற்றும் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோருக்கு தலா ஓராண்டு சிறை தண்டனை விதித்தும், கடன் தொகை ரூ.48.68 லட்சத்தை வழங்க வேண்டுமென்றும், அந்த தொகையை வழங்காவிட்டால் கூடுதலாக 2 மாதங்கள் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டுமென்றும் தீர்ப்பு அளித்துள்ளார்.