

சென்னை: ஆன்லைன் வர்த்தகம், டிஜிட்டல் கைது, ஆன்லைன் பகுதி நேர வேலை, கிரிப்டோ கரன்சி, வாட்ஸ்-அப் ஹேக்கிங் உட்பட பல்வேறு வகையான சைபர் மோசடிகளைத் தடுக்கவும், மக்கள் இழந்த பணத்தை மீட்கவும், குற்றவாளிகளைக் கைது செய்யவும் சென்னை காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள 12 காவல் மாவட்டங்களில் சைபர் க்ரைம் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் உள்ள 4 மண்டலங்களிலும் சைபர் க்ரைம் பிரிவு பிரத்யேகமாக செயல்பட்டு வருகிறது.
பாதிக்கப்பட்டவர்கள் இவற்றில் எங்கேனும் புகார் தெரிவித்தால் மோசடி வங்கிக் கணக்குகளை உடனடியாக முடக்குதல், நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முடக்கப்பட்ட தொகையை திரும்ப பெற்றுக் கொடுத்தல் மற்றும் சைபர் குற்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தல் ஆகிய பணிகளை சைபர் க்ரைம் போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் கடத்த மாதத்தில் (நவம்பர்) மட்டும் ரூ.2 கோடியே 4 லட்சத்து 92,483-ஐ சென்னை சைபர் க்ரைம் போலீஸார் மீட்டு, அந்த பணத்தை இழந்தவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
மேலும் நடப்பு 2025-ம் ஆண்டில் இதுவரை ரூ.24 கோடியே 92 லட்சத்து 13,483 மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.