

சென்னை: ஏஐ தொழில்நுட்பம் மூலம் தயாரிக்கப்பட்ட வீடியோ மூலம் கிரிக்கெட் பயிற்சியாளரிடம் ரூ.2.11 கோடி ஆன்லைன் முதலீட்டு மோசடி செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பொம்மை கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை அடையார் பகுதியில் வசிப்பவர் டி.ஏ.சேகர் (69). கிரிக்கெட் பயிற்சியாளரான இவர் ஃபேஸ்புக் மூலம் வந்த விளம்பரம் ஒன்றை அண்மையில் பார்த்தார். ஏஐ (செயற்கை நுண்ணறிவு) மூலம் உருவாக்கப்பட்ட அந்த வீடியோவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுவது போல வீடியோ இருந்தது. இதைப் பார்த்து உண்மையென நம்பினார்.
மேலும், அந்த மோசடி நபர்கள், நாங்கள் கூறும் வர்த்தக தளத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதை நம்பி அவர்கள் வழிகாட்டிய போலியான ஆன்லைன் வர்த்தகத் தளங்களில் பல்வேறு தேதிகளில் 23 பரிவர்த்தனைகளில் ரூ.2.11 கோடி தொகையை மோசடியாளர்களுக்கு வங்கிக் கணக்குகள் மூலம் அனுப்பியுள்ளார்.
ஆனால், அவர் செய்த முதலீட்டுக்கு வட்டி கிடைக்கவில்லை. இதனையடுத்து அவர் வட்டி வராதது குறித்து கேள்வி எழுப்பி உள்ளார். அப்போது மோசடி கும்பல் மேலும் பணத்தை முதலீடு செய்யுமாறு வற்புறுத்தியது. இதனால் அவர்களை அடையாளம் காணும் வகையில் ‘வங்கிக் கணக்கில் பணம் இல்லை. கையில் ரொக்கமாக பணம் இருக்கிறது’ என்று கூறியுள்ளார். அதற்கு மோசடியாளர்கள் சேகரிடம் ரூ.25 லட்சத்தை நாங்கள் அனுப்பும் நபரிடம் கொடுத்து அனுப்புங்கள் எனக் கூறியுள்ளனர்.
தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சேகர் இந்த விவகாரம் தொடர்பாக சென்னை காவல் ஆணையரிடம் புகார் தெரிவித்தார். அதன்படி சைபர் க்ரைம் துணை ஆணையர் ஸ்ரீநாதா, உதவி ஆணையர் ராகவி தலைமையிலான தனிப்படை போலீஸார் விசாரணையில் இறங்கினர். முதல் கட்டமாக சேகர் வீட்டுக்கு பணம் வாங்க வந்த ராகுல் ராஜ் புரோஹித் என்ற இளைஞரைப் பிடித்து விசாரித்தனர்.
அப்போது, அவர் தனது தந்தையான பெரம்பூரைச் சேர்ந்த பிரித்விராஜ் புரோஹித் (43) அனுப்பியதால் வந்ததாகத் தெரிவித்தார். இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.
சவுகார்பேட்டையில் பொம்மை கடை நடத்தி வரும் அவர் சைபர் கும்பலின் அறிவுறுத்தலின் பேரில், சைபர் மோசடி மூலம் ஏமாற்றப்பட்ட நபர்களிடமிருந்து பணத்தை பெற்று, அவற்றை மும்பையில் உள்ள மோசடி கும்பலுக்கு அனுப்பி வைத்து கமிஷன் பெற்றது தெரியவந்தது. இதையடுத்து மோசடிக்கு மூளையாக செயல்பட்ட சைபர் க்ரைம் கும்பலை தனிப்படை அமைத்து போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.