

சென்னை: கவர்ச்சிகரமான தீபாவளி சீட்டு அறிவிப்புகளை வெளியிட்டு, பொதுமக்களிடம் ரூ.28 லட்சம் வரை வசூலித்து மோசடி செய்துவிட்டு, ஓராண்டாக தலைமறைவாக இருந்த தம்பதியை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை தி.நகர், தர்மாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கீத வாணி (32). இவர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அந்தப் புகாரில், “எங்கள் பகுதியில் வசிக்கும் தினேஷ் குமார் (34) மற்றும் அவரது மனைவி புவனேஸ்வரி (32) ஆகியோர் `பி.ஜி. ஃபண்ட்' என்ற பெயரில் தீபாவளி சீட்டு நடத்தி, மாதம் ரூ.1,000 வீதம் 12 மாதங்கள் கட்ட வேண்டும். பதிலாக 2 கிராம் தங்க நாணயம், 20 கிராம் வெள்ளி, பட்டாசு மற்றும் இனிப்புகள் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.
இதை நம்பி எனது பெயரிலும், எனது தோழிகள் மற்றும் உறவினர்களான சுகந்தி, ஈஸ்வரி, மணி, நாகலட்சுமி ஆகியோரின் பெயர்களிலும் மொத்தம் 250 கார்டுகள் எடுத்து மாதந்தோறும் பணம் செலுத்தி வந்தேன்.
ஆனால், தீபாவளி நெருங்கிய நேரத்தில் உறுதியளித்தபடி தங்கம் மற்றும் பொருட்களை வழங்காமல், வசூலித்த ரூ.28 லட்சத்துடன் தம்பதியினர் திடீரென தலைமறைவாகினர். அவர்களை கண்டுபிடித்து, பணத்தை திரும்ப பெற்று தர வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
சங்கீத வாணியின் புகாரின் பேரில் பாண்டி பஜார் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். கடந்த ஓராண்டாக போலீஸார் இவர்களைத் தேடி வந்த நிலையில், நேற்று முன்தினம் தினேஷின் செல்போன் சிக்னல் மாங்காடு பகுதியில் காண்பித்தது.
இதனைத் தொடர்ந்து தனிப்படை போலீஸார் அங்கு விரைந்து சென்று, பதுங்கியிருந்த தினேஷ் குமார் மற்றும் புவனேஸ்வரி ஆகிய இருவரையும் கைது செய்தனர். போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பொதுமக்களிடம் வசூலித்த பணத்தை அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு தம்பதியினர் வெளியில் கடனாகக் கொடுத்தது தெரியவந்தது.
கொடுத்த பணம் திரும்ப வராததால், சீட்டு போட்டவர்களுக்கு உரிய பொருட்களை வழங்க முடியாமல் தம்பதியினர் தலைமறைவாகியுள்ளனர். கைது செய்யப்பட்ட தம்பதியினர் இருவரும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.