

சென்னை: போரூரைச் சேர்ந்தவர் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பிரபாகரன். திருமணமாகி மனைவி குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு நொளம்பூர் வேணுகோபால் தெருவில் உள்ள மாமியார் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
அப்போது மாமியார் வீட்டின் அருகே காலி இடத்தில் சிலர் கஞ்சா புகைத்தவாறு, மது அருந்திக் கொண்டிருப்பதைப் பார்த்த பிரபாகரன் அவர்களை அங்கிருந்து துரத்திவிட்டார். தொடர்ந்து மாமியார் வீட்டுக்கு வெளியே அவரது மனைவியுடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது துரத்தப்பட்ட கஞ்சா போதை இளைஞர்கள் திடீரென அங்கு வந்து பிரபாகரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை சரமாரியாக தாக்கினர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கூடியதால் போதை இளைஞர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
அன்று இரவு பிரபாகரன் மாமியார் வீட்டிலேயே தங்கினார். இந்நிலையில் நள்ளிரவு அதே கும்பல் மீண்டும் அங்கு வந்தது. 2 நாட்டு வெடிகுண்டுகளை பிரபாகரன் மாமியார் வீட்டின் மீது வீசிவிட்டு தப்பியது. இந்த நாட்டு வெடிகுண்டுகள் வீட்டுச் சுவர் மற்றும் ஜன்னல் கண்ணாடியில் பட்டு வெடித்துச் சிதறி தீப்பற்றி எரிந்தது.
தகவலறிந்து நொளம்பூர் போலீஸார் சம்பவ இடம் விரைந்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து வழக்குப் பதிவு செய்து அங்கிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
இதில் முகப்பேர் மேற்கு, பஜனை கோயில் தெருவை சேர்ந்த மார்ட்டின் (22), நொளம்பூரைச் சேர்ந்த 15 வயது சிறுவன் உட்பட 5 பேர் கொண்ட கும்பல் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர்.