

சென்னை: டெலிவரி ஊழியரிடம் ‘ஜிபே’ மூலம் பணம் பறித்த இருவர் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மனோ (24). பெருங்குடியில் குடும்பத்துடன் வசிக்கும் இவர் தனியார் நிறுவனத்தில் பொருட்களை டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார்.
இவர் கடந்த 16-ம் தேதி, வாடிக்கையாளருக்கு பொருட்களை டெலிவரி செய்ய தனது இருசக்கர வாகனத்தில், துரைப்பாக்கம், சீவரம் செல்வ கணபதி அவென்யூ 3-வது தெருவில் சென்று கொண்டிருந்தார்.
1,000 ரூபாய்: அப்போது, அங்கிருந்த 2 பேர் மனோவை வழிமறித்து கத்திமுனையில் பணம் கேட்டு மிரட்டினர். அவர் இல்லை என தெரிவித்ததால் சரமாரியாக தாக்கி, அவரது செல்போனை பிடுங்கி ‘ஜிபே’ மூலம் ஆயிரம் ரூபாயை பறித்துவிட்டு தப்பினர்.
இது குறித்து மனோ துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்படி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில் ஜிபே மூலம் பணம் பறித்து தப்பியது துரைப்பாக்கம், வேம்புலியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த மோகனகிருஷ்ணன் (24), பெருங்குடி சவுந்தர்யா நகரைச் சேர்ந்த தினேஷ்பாபு (22) என்பது தெரியவந்தது. அவர்கள் இருவரையும் போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.