

கோப்புப் படம்
திருவள்ளூர்: திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மெய்யூர் கிராமத்தைச் சேர்ந்த பிரேமலதா (75) என்பவர் ஆட்சியரிடம் புகார் அளித்தார்.
அதில் தனக்கு சொந்தமான 66 சென்ட் விவசாய நிலத்தில், சுமார் 60 நாட்களாக வளர்ந்து வந்த நெற்பயிர்கள் மர்ம நபர்களால் விஷ மருந்து தெளித்து அழிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.
பிரேமலதாவின் கணவர் சுப்பிரமணி கடந்த 1989-ம் ஆண்டு உயிரிழந்த நிலையில், ஆள்மாறாட்டம் செய்து கே.முருகன் மற்றும் அவரது மகன் வழக்கறிஞர் நாகராஜ் ஆகியோருக்கு விற்பனை செய்யப்பட்டதாகவும், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போதே இந்தப் பரிவர்த்தனைகள் நடைபெற்றதாகவும் பிரேமலதா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முருகன், அவரது மகன் நாகராஜ் உள்ளிட்டோர் கொண்ட குழுவினர் விஷ மருந்து தெளித்து 66 சென்ட் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்களை முற்றிலும் அழித்ததாக பிரேமலதா குற்றம்சாட்டியுள்ளார். இந்த மூதாட்டியின் நிலப் பிரச்சினைக்கு உரிய விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதியளித்தார்.