

கோப்புப் படம்
பூந்தமல்லி: சின்னத்திரை நடிகை தாமரைச்செல்வியின் தங்க நகையை வாங்கி மோசடி செய்ததாக, சின்னத் திரை துணை இயக்குநர் ஆதி மீது எஸ்ஆர்எம்சி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடந்த ‘பிக் பாஸ்ட நிகழ்ச்சியில் பங்கு பெற்று பிரபலமானவர் தாமரைச்செல்வி. இவர் தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தாமரைச்செல்வியின் கணவர் பார்த்தசாரதி, எஸ்ஆர்எம்சி (போரூர்) காவல் நிலையத்தில் சில தினங்களுக்கு முன்பு புகார் ஒன்றை அளித்தார்.
அதில் பார்த்தசாரதி தெரிவித்துள்ளதாவது: சின்னத் திரை தொடர்களின் துணை இயக்குநரான ஆதி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு என் குடும்பத்துக்கு அறிமுகமாகி, என் குடும்பத்தில் ஒருவராகப் பழகி வந்தார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு அவசரத் தேவைக்காக ஆதி, என்னிடம் பணம் கேட்டபோது, பணம் இல்லாததால் தாமரைச்செல்வியின் 3 பவுன் தங்க நகைகளை கொடுத்து அடகு வைத்துக்கொள்ளுமாறு கூறினேன்.
இதையடுத்து, அந்நகைகளை அய்யப்பன்தாங்கல் பகுதியில் உள்ள அடகுக் கடை ஒன்றில் ஆதி தன் பெயரிலேயே அடகு வைத்து பணத்தைப் பெற்றுக் கொண்டார்.
அதன் பிறகு, நகைகளை மீட்க சம்பந்தப்பட்ட அடகுக் கடைக்கு நான் சென்று கேட்டபோது, ஆதி அந்த நகையை மீட்டு, அதிக தொகைக்கு விற்றுவிட்டது தெரிய வந்தது. இதுகுறித்து, ஆதியை செல்போனில் பலமுறை தொடர்பு கொண்டு கேட்டும் அவர் முறையான பதில் அளிக்கவில்லை.
என் நகையை கொடுக்காமல் என்னை ஏமாற்றி வரும் ஆதி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அப்புகாரில் பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.
இப்புகார் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் எஸ்ஆர்எம்சி போலீஸார், விசாரணைக்கு வருமாறு சின்னத் திரை தொடர்களின் துணை இயக்குநர் ஆதிக்கு சம்மன் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சின்னத்திரை நடிகை தாமரைச்செல்வி வெளியிட்டுள்ள காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.