

தென்காசி: தென்காசியில் மாணவிக்குத் தொடர்ந்து தொல்லை கொடுத்துவந்த கல்லூரி தாளாளர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பிய புகாரின்பேரில் போலீஸார் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரம் பகுதியில் தனியார் பாராமெடிக்கல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் பயின்று வருகிறார்கள். இக்கல்லூரியில் கடந்த 2024-ம் ஆண்டு பயின்ற கேரளாவை சேர்ந்த மாணவி ஒருவருக்கு, கல்லூரியின் தாளாளரான பினு என்பவர், பல்வேறு வகைகளில் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
அந்த மாணவி கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கி பயின்று வந்தபோது, தனது ஆண் நண்பருடன் செல்போனில் பேசியதாக கூறப்படுகிறது. இதை தெரிந்து கொண்ட பினு, அந்த மாணவியை மிரட்டி, பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார். இந்நிலையில், அந்த மாணவி கல்லூரிப் படிப்பை முடித்து 2 ஆண்டுகள் கடந்த பின்னரும், பினு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
மனவேதனை அடைந்த அந்த மாணவி, தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அவரது பெற்றோர், தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் மனு ஒன்றை அனுப்பினர்.
அதன் அடிப்படையில், தென்காசி மகளிர் காவல் நிலைய போலீஸார், கல்லூரி தாளாளர் பினு மீது, பெண் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், காவல் நிலையத்தில் வைத்து தனக்கு நெஞ்சுவலிப்பதாக பினு தெரிவித்ததால், அவரை, தென்காசி அரசு மருத்துவமனையில் போலீஸார் அனுமதித்துள்ளனர்.