

கோவை: காட்பாடி அருகே ரயிலில் பயணித்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போலீஸ்காரர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வருபவர் ஷேக் முகமது. கடந்த வாரம் சென்னையிலிருந்து இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் கோவை வந்துள்ளார்.
அப்போது, ரயிலில் உடன் பயணித்த மாணவிக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதை செல்போனில் பதிவு செய்த மாணவி, காட்பாடி போலீஸில் புகாராக அளித்தார். இதன் பேரில் காட்பாடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், மாணவி எடுத்திருந்த வீடியோ பதிவுகளின் அடிப்படையிலும், காவல் துறையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாலும் காவலர் ஷேக் முகமதுவை சஸ்பெண்ட் செய்து கோவை மாநகர காவல் துணை ஆணையர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.