

தப்பியோடும் சிறுவன்
கோவை: கோவையில் சாலையோரம் இருந்த மனநலம் பாதித்த பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீற முயன்ற சிறுவன், தெருநாய் துரத்தியதால் தப்பியோடிய நிலையில், போலீஸார் அந்தச் சிறுவனை கைது செய்தனர்.
கோவை துடியலூரை அடுத்து என்.ஜி.ஜி.ஓ. காலனி அருகேயுள்ள அசோகபுரம் பகுதியில் செயல்பட்டு வந்த ஒரு பெட்டிக்கடைக்கு நேற்று முன்தினம் (செப் 2) நள்ளிரவு மர்மநபர்கள் தீ வைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் பேரில் துடியலூர் போலீஸார் விசாரித்தனர். விசாரணையின் ஒரு பகுதியாக, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது, மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை இளைஞர் ஒருவர் சாலையின் ஓரத்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த காட்சிகள் பதிவாகியிருந்ததை கவனித்தனர். உடனடியாக போலீஸார் அது தொடர்பாக விசாரித்தனர்.
அந்த சிசிடிவி காட்சிகளில், சாலை ஓரத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் படுத்திருக்கும் நிலையில், சாலையில் நடந்து வந்த நபர், குரைத்து கொண்டு இருந்த நாயைப் பற்றி அவரிடம் கேட்கிறார். பின்னர், நாயை விரட்ட விடும் அந்த நபர், மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை சாலை ஒரத்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சிக்கிறார்.
மனநிலை பாதிக்கபட்ட அப்பெண் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்ட நிலையில், அப்பெண்ணுக்காக தெரு நாய் அந்நபரைப் பார்த்து குரைத்து விரட்டுவதற்கு போராடுவதும் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.
பின்னர் நாய் தொடர்ந்து குரைத்து அச்சுறுத்தியதால் பாலியல் வன்கொடுமை செய்ய முடியாமல் அந்த நபர், பெண்ணை விட்டுவிட்டு ஓடும் காட்சிகளும், தெரு நாய் அவரை விரட்டிச் செல்வதும் சிசிடிவி காட்சிகளில் உள்ளது.
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் பாலியல் தொந்தரவு அளித்த நபர் குறித்து துடியலூர் போலீஸார் விசாரித்தனர். அதில், பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்தவர் துடியலூரைச் சேர்ந்த 16 வயது சிறுவன் எனத் தெரிந்தது. இதையடுத்து போலீஸார் வழக்குப்பதிந்து அச்சிறுவனை கைது செய்தனர்.