

சென்னை: இருசக்கர வாகனத்தை அடுக்கு மாடிக் குடியிருப்பின் வழிப்பாதையில் நிறுத்திய விவகாரத்தில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக வீடு புகுந்து பொருட்களை சூறையாடிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
சாலிகிராமம், அபுசாலி தெருவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் முதல் தளத்தில் சுவர்ணலட்சுமி (42) என்பவர் குடும்பத்துடன் வசிக்கிறார். கடந்த 28-ம் தேதி மதியம், அவர்களது குடியிருப்பின் கேட் முன்னால் அடையாளம் தெரியாத நபர் அவரது இருசக்கர வாகனத்தை வழியில் நிறுத்திவிட்டு சென்றார். இதனால் யாரும் குடியிருப்புக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
சங்கிலி போட்டு பூட்டினர்
இதனால் கோபம் அடைந்த சுவர்ணலட்சுமி சம்பந்தப்பட்ட வாகனத்தை இரும்புச் சங்கிலியால் பூட்டினார். சிறிது நேரம் கழித்து 2 பெண்கள் வந்து, ‘யார் எங்கள் வாகனத்தை சங்கிலியால் பூட்டி வைத்துள்ளது’ எனக் கேட்டபோது, சுவர்ணலட்சுமியும் அவரது தாயாரும் ‘நாங்கள்தான் பூட்டினோம், இப்படி வாசலில் நிறுத்தினால் நாங்கள் எப்படி செல்வது, இனிமேல் இங்கு வாகனத்தை நிறுத்தாதீர்கள்’ எனக்கூறி சங்கிலியின் பூட்டைத் திறக்க சாவியைக் கொடுத்தனர்.
ஆனால் அவர்கள் வாக்குவாதம் செய்தனர். இதில் இரு தரப்பினரிடையே கைகலப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர். சிறிது நேரத்தில் தகராறு செய்த பெண்ணின் தம்பி உட்பட சிலர் சுவர்ணலட்சுமியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, கிரிக்கெட் மட்டை மற்றும் கம்பால் வீட்டிலிருந்த டிவி, கண்ணாடி உள்ளிட்ட பொருட்களை உடைத்து, வீட்டிலிருந்த பொருட்களை சூறையாடிவிட்டுத் தப்பினர்.
இது தொடர்பாக சுவர்ணலட்சுமி விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்படி போலீஸார் வழக்குப் பதிந்து வீடு புகுந்து சூறையாடிய திருவல்லிக்கேணி நடுக்குப்பத்தைச் சேர்ந்த ஷர்மிளா (25), அவரது தம்பி பவேஷ் (23), அயனாவரம் புதுநகர் ஆனந்த் (36), வில்லிவாக்கம் சிட்கோ நகர் தீபக் (20), கொரட்டூரைச் சேர்ந்த முத்துப்பாண்டியன் (27), வில்லிவாக்கம் ஐகோர்ட் காலனி பலராம் (36), கொரட்டூர் எம்ஜிஆர் தெருவைச் சேர்ந்த ராஜு (28) ஆகிய 7 பேரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.