

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களுக்கு இடையே, புழல் சிறையில் மோதல் ஏற்பட்டுள்ளது. தடுக்க முயன்ற சிறைத்துறை அதிகாரி மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், 2024 ஜூலை 5-ம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் ஆயுள்சிறைக் கைதியாக இருந்த ரவுடி நாகேந்திரன், இவரது மகன் அஸ்வத்தாமன், மற்றொரு தாதாவான மறைந்த ஆற்காடு சுரேஷ் தம்பி பொன்னை பாலு உட்பட 25-க்கும் மேற்பட்டோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் ரவுடி திருவேங்கடம் போலீஸாரின் என்கவுன்ட்டரில் உயிரிழந்தார். உடல் நலக்குறைவு காரணமாக ரவுடி நாகேந்திரன் அண்மையில் இறந்தார். அஸ்வத்தாமன் உள்ளிட்ட 12 பேர் ஒரு மாதத்துக்கு முன்பு ஜாமீனில் வெளிவந்தனர்.
பொன்னை பாலு, அவரது மைத்துனர் மணிவண்ணன், வெடிகுண்டு சப்ளையர் எனக் கூறப்படும் ரவுடி புதூர் அப்பு உள்ளிட்டோர் ஜாமீன் கிடைக்காமல் புழல் சிறை உயர் பாதுகாப்புப் பிரிவிலேயே உள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் மற்றவர்களை ஜாமீனில் எடுப்பது தொடர்பான விவகாரத்தில் பொன்னை பாலு, அவரது மைத்துனர் மணிவண்ணன் ஆகியோர் ஒரு தரப்பாகவும், வெடிகுண்டு சப்ளையர் புதூர் அப்பு தலைமையில் மற்றொரு தரப்பாகவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புழல் போலீஸ் விசாரணை: பின்னர் இரு தரப்பினரும் கைகளாலும், உருட்டுக் கட்டைகளாலும் தாக்கிக் கொண்டுள்ளனர். அங்கு பணியில் இருந்த சிறைத்துறை அதிகாரி திருநாவுக்கரசு மற்றும் சிறைக் காவலர்கள் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்த முயன்றனர். அப்போது திருநாவுக்கரசு மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த மோதல் சம்பவம் மற்றும் சிறை அதிகாரி மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக சிறைக் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். முதற்கட்ட விசாரணையில் வெடிகுண்டுகள் சப்ளை செய்த அப்புவுக்கு பேசியபடி பணம் கொடுக்க வில்லையாம்.
இது தவிர ஜாமீனில் எடுக்கவும் ஆற்காடு சுரேஷ் தரப்பு உதவவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால்தான் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலுவுக்கும் - அப்புவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.