சென்னை: செல்போன்களுக்கு பதில் ஸ்வீட்ஸ் பாக்ஸ் வழங்கிய ரேபிடோ டெலிவரி ஊழியர் கைது

சென்னை: செல்போன்களுக்கு பதில் ஸ்வீட்ஸ் பாக்ஸ் வழங்கிய ரேபிடோ டெலிவரி ஊழியர் கைது
Updated on: 
1 min read

சென்னை: ரேபிடோ இருசக்கர வாகன டெலிவரி மூலம் அனுப்பப்பட்ட பார்சலில் இருந்த 2 விலை உயர்ந்த செல்போன்களை திருடிவிட்டு, அதற்கு பதிலாக ஸ்வீட்ஸ் பாக்ஸை வைத்து நூதன மோசடியில் ஈடுபட்ட டெலிவரி ஊழியரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை மண்ணடி, சைவ முத்தையா தெருவை சேர்ந்தவர் சையத் அப்ரிடி (28). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதுடன், எஸ்.ஆர்.பி. கோயில் தெருவில் எலெக்ட்ரானிக்ஸ் கடையும் நடத்தி வருகிறார். கடந்த 6-ம் தேதி மாலை, இவரது வியாபார கூட்டாளி நுங்கம்பாக்கத்தில் இருந்து 2 செல்போன்களை ரேபிடோ இருசக்கர வாகன டெலிவரி மூலம் பார்சலில் அனுப்பி வைத்தார்.

அந்த பார்சலை பெற்றுக்கொண்ட சையத் அப்ரிடி, திறந்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார். அதில் 2 செல்போன்களுக்கு பதிலாக ஸ்வீட்ஸ் பாக்ஸ் வைக்கப்பட்டிருந்தது. இதனால் டெலிவரி ஊழியரே செல்போன்களை திருடிவிட்டு, ஸ்வீட் பாக்ஸை வைத்து ஏமாற்றியதாக சந்தேகித்த சையத் அப்ரிடி, இதுகுறித்து திரு.வி.க. நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்படி, அக்காவல் நிலைய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில், செல்போன்களை திருடியது டெலிவரி ஊழியரான வியாசர்பாடியை சேர்ந்த மனிஷ்குமார் (19) என்பது தெரிந்தது. அவரை கைது செய்த போலீஸார் அவரிடம் இருந்து சாம்சங் மற்றும் கூகுள் பிக்சல் என 2 செல்போன்களையும் மீட்டனர்.

போலீஸார் நடத்திய விசாரணையில் மனிஷ்குமார் , சம்பவத்தன்று நுங்கம்பாக்கத்தில் இருந்து பார்சலை பெற்றுக்கொண்டு திரு.வி.க. நகர் நோக்கி வந்தபோது, அகரம் சந்திப்பு அருகே பார்சலை பிரித்துள்ளார். அதிலிருந்த 2 செல்போன்களையும் திருடிவிட்டு, அவற்றுக்கு பதிலாக இனிப்பு பெட்டியை வைத்து மீண்டும் பார்சலை ஒப்படைத்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

சென்னை: செல்போன்களுக்கு பதில் ஸ்வீட்ஸ் பாக்ஸ் வழங்கிய ரேபிடோ டெலிவரி ஊழியர் கைது
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றவில்லை: பக்தர்கள் ஏமாற்றம்

X