கொத்தவால்சாவடி வரத முத்தையப்பன் தெருவில் ரத்தன் லால் (43) என்பவர் மளிகைக் கடை நடத்துகிறார். கடந்த 6ம் தேதி காலை அவரது கடைக்கு வந்த மீன்பாடி வண்டியில் இருந்து சரக்குகளை லோடு மேன் சரவணன் இறக்கிக் கொண்டிருந்தார்.
அப்போது, வண்டியில் இருந்த சுமார் ரூ.9 ஆயிரம் மதிப்புள்ள 'கிட்கேட்' சாக்லேட் பெட்டி மாயமானது. ரத்தன்லால் கொடுத்த புகாரின் பேரில், அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கொத்தவால்சாவடி போலீஸார் ஆய்வு செய்தனர்.
அதன் மூலம், சாக்லேட் பெட்டியை திருடியது பழைய வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்த யுவராஜ் (36) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து கிட்கேட் சாக்லேட் பெட்டி மீட்கப்பட்டது.