

தனியார் சிமென்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பெயரில் போலி குறுஞ் செய்தி அனுப்பி, ரூ.80 லட்சம் பணத்தை அபகரித்த வழக்கில், கர்நாடகாவைச் சேர்ந்த 2 இளைஞர்களை, சென்னை மத்திய குற்றப் பிரிவு சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர்.
சென்னை, நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்தவர் பிரணா தார்த்தி ஹரன் (59). தனியார் சிமென்ட் நிறுவனத்தில் மூத்த மேலாளராகப் பணி யாற்றி வருகிறார். கடந்த அக்டோபர் மாதம். இவரது வாட்ஸ்-அப் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது.
அதில் பேசிய நபர், தன்னை அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கிருஷ்ணமூர்த்தி சுரேஷ் என அறிமுகப்படுத்தி கொண்டு, அவசரத் தேவைக்காக குறிப்பிட்ட நிறுவனத்தின் பெயரில் உள்ள வங்கி கணக்குக்கு ரூ.80 லட்சம் மாற்றுமாறு கூறியுள்ளார்.
தனது நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரிதான் கேட்கிறார் என்று நம்பிய மேலாளர், எவ்வித சரி பார்ப்பும் செய்யாமல் அந் தப் பணத்தை அனுப்பியுள் ளார். பின்னர், நேரில் விசா ரித்த போது தான், அது 'மேன் -இன்-தி-மிடில்' என்ற சைபர் மோசடி என்பது தெரியவந்தது. இதுகுறித்து, அவர் சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்தார்.
வழக்குப் பதிவு செய்த சைபர் கிரைம் போலீஸார், தீவிர விசாரணை மேற்கொண்டனர். மோசடிப் பணம் எங்கே சென்றது என ஆய்வு செய்ததில், கர்நாடக மாநிலம் மைசூரைச் சேர்ந்த முகமது அர்பாஸ் (21) என்பவரது வங்கி கணக்குக்கு ரூ.5.48 லட்சமும், அதே ஊரைச் சேர்ந்த ஹஷீர் அக்தர் (21) என்பவரது கணக்குக்கு ரூ.10 லட்சமும் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, தனிப்படை போலீஸார் மைசூர் விரைந்து சென்று, தலைமறைவாக இருந்த இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட் டன. கைதான இருவரும் கமிஷன் பணத்துக்காகத் தங்களது வங்கி கணக்குகளை மோசடி கும்பலுக்குப் பயன்படுத்த அனுமதித்தது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட இருவரையும் நேற்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.