சென்னையில் நடிகர் மன்சூர் அலிகான் மகன் கார் விபத்தில் காயம்
நுங்கம்பாக்கத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மகன் ஓட்டி சென்ற கார், மரத்தில் மோதி விபத்துக்குள் ளானது. இந்த விபத்தில், லேசான காயத்துடன் அவர் உயிர்தப்பினார்.
சென்னை, நுங்கம்பாக் கத்தைச் சேர்ந்தவர் துக்ளக் (27). பிரபல நடிகர் மன்சூர் அலிகானின் மகனான இவர், திரைப்படத் துறையில் உதவி இயக்குநராகப் பணி யாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில், நுங்கம்பாக்கம் ஹாடோஸ் சாலையில் இருந்து உத்தமர் காந்தி சாலை நோக்கி துக்ளக் தனது காரில் சென்று கொண்டிருந்தார். கார் அதிவேகத்தில் சென்றதாகக் கூறப்படுகிறது.
கட்டுப்பாட்டை இழந்த கார்: ஹாடோஸ் சாலையில் இருந்த வேகத்தடையை கவனிக்காமல் அவர் காரைச் செலுத்தியதால், நிலை தடுமாறிய கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. இறுதியில், அச்சாலையில் உள்ள ஓட்டல் எதிரே இருந்த மரத்தில் பலமாக மோதி கவிழ்ந்தது.
விபத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், உடனடியாக ஓடிச்சென்று காரினுள் சிக்கியிருந்த துக்ளக்கை மீட்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த நுங்கம்பாக்கம் போலீஸார், லேசான காயங்களுடன் உயிர் தப்பிய அவரை சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து திருவல்லிக்கேணி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். வேகத்தடையை கவனிக்காமல் அதிவேகமாகச் சென்றதே விபத்துக்கு முக்கியக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஏற்கெனவே, கடந்த 2024-ம் ஆண்டு, போதைப் பொருள் வழக்கு ஒன்றில் துக்ளக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த விபத்து தொடர்பாக போலீஸார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
