

ரூ.40 லட்சம் கொடுத்தால் 5 மணி நேரத்தில் ரூ.50 லட்சம் தருவதாக கூறி, ரூ.40 லட்சத்தை மோசடி செய்த 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை, நுங்கம்பாக்கத்தை சேர்ந்தவர் ஆனந்தராஜ். பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 9-ம் தேதி, தி.நகர், ராஜாபாதர் தெருவில் உள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்து கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த 3 பேர், நாங்கள் தஞ்சாவூரை சேர்ந்தவர்கள் என்றும், டிரேடிங் பிசினஸ் செய்வதாகவும் அவரிடம் தங்களை அறிமுகம் செய்து கொண்டனர்.
தொடர்ந்து, ஆனந்தராஜிடம் பேசிய அவர்கள், தங்களிடம் ரூ.40 லட்சம் கொடுத்தால் 5 மணி நேரத்தில் ரூ.50 லட்சமாக திருப்பி தருவதாக கூறியுள்ளனர். மேலும், அருகில் அவர்கள் தங்கியிருந்த ஓட்டலுக்கு அழைத்து சென்று, சூட்கேசில் வைத்திருந்த ரூ.50 லட்சத்தை ஆனந்தராஜிடம் காண்பித்துள்ளனர்.
இதை நம்பி, ஆனந்தராஜ், அந்த 3 பேர் கூறிய வங்கி கணக்குக்கு பணம் அனுப்பி வைத்துள்ளார். மேலும், 3 நாட்கள் அவர்கள் தங்கியிருந்த ஓட்டலிலேயே ஆனந்தராஜை தங்க வைத்துள்ளனர். ஆனால், அவர்கள் கூறியபடி ஆனந்தராஜுக்கு ரூ.50 லட்சம் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை.
கொலை மிரட்டல்: இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஆனந்தராஜ், கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார். அப்போது, அவர்கள் இரும்பு கம்பியால் தாக்கி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து, அவர்களிடம் இருந்து தப்பிய ஆனந்தராஜ், பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், ஓட்டல் அறையில் தங்கியிருந்த தஞ்சாவூரை சேர்ந்த லூர்து என்சன்ராஜ் (38), அவரது சகோதரி மகன்கள் மரிய செர்வின் ஜெப்ரி (28), ஷெல்டன் பெர்மினிஸ் (25) ஆகியோரை கைது செய்தனர்.