

கரூர்: தோகைமலை அருகே அரசுப் பள்ளியின் பட்டியலின பெண் சமையல் உதவியாளர் பணி நீக்கம் செய்யப்பட்ட சம்பவத்தில், பள்ளி தலைமை ஆசிரியர், வட்டார மேலாளர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கரூர் மாவட்டம் தோகை மலையை அடுத்த பொன்னம்பட்டியைச் சேர்ந்தவர் ரங்கராஜ் மனைவி நிரோஷா(35). பட்டியலினத்தை சேர்ந்த இவர், சின்னரெட்டியப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தில் சமையல் உதவியாளராகப் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், கடந்த 16-ம் தேதி பள்ளி தலைமை ஆசிரியர் பானுமதி, “நீங்கள் சமையல் செய்வதால், பள்ளிக்கு வரும் குழந்தைகள் எண்ணிக்கை குறைகிறது. எனவே, வேலையை விட்டுவிடுங்கள்” என்று நிரோஷாவிடம் கூறினாராம்.
பின்னர், தோகைமலை ஊராட்சி ஒன்றிய மகளிர் திட்ட வட்டார இயக்க மேலாளர் சத்யா, நிரோஷாவை பணியிலிருந்து நீக்கிவிட்டு, வேறு ஒருவரை சமையல் உதவியாளராக நியமித்துள்ளதாகத் தெரிகிறது.
இது தொடர்பாக தோகைமலை காவல் நிலையம், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த 18-ம் தேதி நிரோஷா புகார் அளித்தார்.
அதன்பேரில் தோகைமலை போலீஸார் விசாரணை நடத்தி, எஸ்.சி. எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் பள்ளி தலைமை ஆசிரியர் பானுமதி, தோகைமலை வட்டார மேலாளர் சத்யா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.