

சென்னை: வடசென்னை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வழக்கு பணியாளராக பணிபுரிய பெண்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 24 மணி நேர உடனடி மற்றும் அவசர சேவைகளை வழங்குவதற்காக, மத்திய பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் ஒருங்கிணைந்த சேவை மையம், பெண்கள் உதவிமையம் போன்ற சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
மருத்துவ உதவி, ஆலோசனை, சட்டம், உளவியல் மற்றும் உணர்வியல் ரீதியான ஆதரவு தேவைப்படும் ஒவ்வொரு மகளிருக்கும் உதவுவதே இந்த மையங்களின் நோக்கமாகும்.
இந்நிலையில் சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் வடசென்னை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் தற்காலிக ஒப்பந்த அடிப்படை பணியிடமான வழக்கு பணியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இப்பணிக்கு சமூகப் பணியில் இளங்கலை பட்டம் பெற்ற, 35 வயதுக்குட்பட்ட சென்னை மாவட்டத்தை சேர்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் பெண்களுக்கு எதிரான வன்முறை தடுப்பு தொடர்பான பணிகளில் ஓராண்டு அனுபவமும், உளவியல் ஆலோசனைகளை வழங்குவதில் முன் அனுபவமும் வேண்டும்.
தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு மாத ஊதியமாக ரூ.18 ஆயிரம் வழங்கப்படும். தகுதியுள்ள நபர்கள் https://chennai.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் சென்னை சிங்காரவேலர் மாளிகையில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தில் நேரடியாகவோ தபால் மூலமாகவோ oscnorthchennai@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ வரும் ஜன.12-க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.