

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி ஊராட்சி நடுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் 7 வயது சிறுமி. இவர், ஆலம்பூண்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் 2-ம் வகுப்பு படிக்கிறார். இச்சிறுமி தனது பிறந்தநாளை கொண்டாடிவிட்டு, பெற்றோருடன் கடந்த 11-ம் தேதி இரவு வீட்டில் தூங்கி உள்ளார்.
அதிகாலை 3 மணியளவில் சிறுமியை காணவில்லை. இதையறிந்த சிறுமியின் தாயார் பதற்றமடைந்தார். வீட்டின் பின்பக்க கதவு திறந்திருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் சிறுமியை கடத்தி சென்றுவிட்டதாக தகவல் பரவியது. எஸ்பி மதிவாணன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
வீட்டில் இருந்து சிறுமி படிக்கும் பள்ளி வரை போலீஸ் மோப்ப நாய் சென்றது. 5 தனிப்படைகள் களம் இறக்கப்பட்டது. சிறுமியை தேடும் பணி 2-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது.
சிறுமியின் பெற்றோர், உறவினர், கிராம மக்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர், சென்னையில் தங்கி உள்ள சிறுமியின் அக்கா உள்ளிட்டோரிடம் தனித்தனி குழுவாக பிரிந்து தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுமியின் தாயார் பயன்படுத்திய செல்போன் எண்ணில் பதிவாகி இருந்த அழைப்புகள், சோதனையிடப்பட்டன. இதில் உள்ளூர் கிராம மக்களின் எண்கள் அதிகளவில் பதிவாகி இருப்பது தெரியவந்தது.
ஆலம்பூண்டியில் உள்ள செல்போன் டவரில் பதிவான அழைப்புகள் ஆய்வு செய்யப்பட்டன. இதிலும், சம்பவ நடைபெற்ற நாளின் 24 மணி அழைப்புகளில் உள்ளூர் அழைப்புகளே இருக்கின்றன.
பிரதான சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளிலும் வழக்கமான வாகனங்களே சென்று வந்தது தெரியவருகிறது. புதர்கள், மலை பகுதிகள், நீர் நிலைகள் மற்றும் சுற்றுப்புற கிராமங்கள் என அனைத்து இடங்களிலும் தனிப்படை போலீஸாரின் ஒரு குழுவினர் ட்ரோன் மூலம் தேடி வருகின்றனர்.
இத்தகைய முயற்சிகளை மேற்கொண்டும், ஒரு சிறிய தடயம் கூட தனிப்படை போலீஸாருக்கு கிடைக்கவில்லை. சிறுமி கடத்தப்பட்டிருந்தால், அவரது அலறல் சத்தம் கேட்டிருக்க வேண்டும் என கூறும் தனிப்படை போலீஸார், சிறுமியின் வாயை பொத்தி தூக்கி சென்றார்களா? அல்லது முகம் அறிந்தவர்கள் அழைத்துச் சென்றார்களா? என்ற கோணத்திலும் விசாரணையை தீவிரப்படுத்தி இருக்கின்றனர்.