

ராணி
கரூர்: கரூரில் ஹோட்டல் உரிமையாளரின் கார், வைர நகையை அபகரித்து, கொலை மிரட்டல் விடுத்த டிவி நடிகை, கணவர் உள்ளிட்ட 3 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்தவர் ராணி.
தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். இவரது கணவர் பாலாஜி என்ற பாலமுருகன். தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகியான இவர், கரூர்- கோவை சாலையில் உள்ள ஒரு ஹோட்டலை ரூ.10 லட்சத்துக்கு குத்தகைக்கு எடுத்துள்ளார். ஆனால் குத்தகை பணத்தை ஹோட்டல் உரிமையாளர் தினேஷிடம், பாலாஜி வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த மாதம் கரூர் வந்த பாலாஜி, தினேஷின் ரூ.80 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு இறக்குமதி காரை 2 மாதங்கள் பயன்படுத்திவிட்டு தருவதாக, சென்னை எடுத்து சென்றுள்ளார்.
அந்த காரில், தினேஷின் 5 வைரத் தோடுகள் இருந்துள்ளன. இதையடுத்து, பாலாஜியை தினேஷ் தொடர்புகொண்டு வைரத்தோடுடன் காரை ஒப்படையுங்கள் என தெரிவித்துள்ளார்.
அதற்கு ராணி மற்றும் அவரது கணவர் பாலாஜி, அவரது உறவினர் புருஷோத்தமன் ஆகியோர் காரையும், நகைகளையும் திரும்ப தர முடியாது எனக்கூறி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, கரூர் நகர காவல் நிலையத்தில் டிச.16-ம் தேதி தினேஷ் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, புருஷோத்தமனை நேற்று முன்தினம் கரூர் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள பாலாஜியை போலீஸார் தேடி வருகின்றனர். ராணிக்கு சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.