

சென்னை: கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை சுற்றுச்சுவரில் கார் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உள்பட 5 பேர் காயம் அடைந்தனர்.
சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்தவர் பால ஆகாஷ் (20). இவர் ராமாபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக். இறுதி ஆண்டு படித்து வருகிறார். இவரது நண்பர்கள் ஜான், கவுஷிக், ராகவ், ராதிகா. இவர்கள் 5 பேரும் நேற்று முன்தினம் நள்ளிரவு ஈசிஆர் கடற்கரை பகுதிக்கு காரில் செல்ல முடிவு செய்தனர். மறுநாள் அதிகாலையில் சூரிய உதயத்தை பார்த்துவிட்டு திரும்ப திட்டமிட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து நள்ளிரவு 12.45 மணியளவில் பால ஆகாஷ் காரை ஓட்டிச் சென்றார். சைதாப்பேட்டை தாலுகா அலுவலக சாலை வழியாக கிண்டி சர்தார் வல்லபபாய் படேல் சாலையை நோக்கி சென்றனர். கார் ஆளுநர் மாளிகை பிரதான நுழைவுவாயில் அருகே சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.
வேகமாக சென்ற கார் சாலையில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை இடித்து தள்ளிவிட்டு, அங்கிருந்த ஆளுநர் மாளிகை சுற்றுச்சுவரில் பயங்கரமாக மோதி நின்றது. மோதிய வேகத்தில் காரின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. ஆளுநர் மாளிகை சுற்றுச்சுவரிலும் சேதம் ஏற்பட்டது.
இதைக் கண்டு ஆளுநர் மாளிகை பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். இந்த விபத்தில் பால ஆகாஷ் மற்றும் அவரது நண்பர்கள் கவுஷிக், ஜான் ஆகிய 3 பேருக்கு காயம் ஏற்பட்டது.
அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் சைதாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மற்ற 2 பேருக்கு உள்காயங்கள் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அடையாறு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
விபத்தில் சிக்கிய காரை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீரமைத்தனர். மேலும், விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார் அதிவேகமாக ஓட்டப்பட்டதா? அல்லது திடீரென கட்டுப்பாட்டை இழந்ததற்கான வேறு காரணம் ஏதேனும் உள்ளதா? என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.