

சென்னை: சேத்துப்பட்டு, ஹாரிங்டன் சாலை 11-வது அவென்யூவை சேர்ந்தவர் கமலேசன் ஆபிரகாம் (58). தொழிலதிபரான இவர் தினமும் காலை கீழ்ப்பாக்கம் நேரு பூங்கா அருகே உள்ள மைதானத்துக்கு நடைபயிற்சிக்குச் செல்வது வழக்கம்.
நேற்றுமுன்தினம் காலை வழக்கம் போல் நடைபயிற்சிக்காக வீட்டில் இருந்து புறப்பட்டு சென்ற போது, முகமூடி அணிந்த 4 பேர் கொண்ட கும்பல் காரில் வந்து அவரை கடத்தினர். மேலும், ’ ரூ.50 லட்சம் பணத்தை தர வேண்டும். இல்லாவிட்டால் கொலை செய்து விடுவோம்’ என்று மிரட்டினார்கள்.
இதனால் பயந்து போன தொழிலதிபர் ஆபிரகாம், தன்னால் ரூ.50 லட்சம் தர முடியாது என்றும், ரூ.1 லட்சம் மட்டும் தருவதாகவும் முதலில் தெரிவித்தார். இதனால் கோபம் கொண்ட முகமூடி ஆசாமிகள் அவரை அடித்து உதைத்து சித்ரவதை செய்தனர். வேறு வழியில்லாமல் ரூ.30 லட்சம் தருவதாக ஆபிரகாம் ஒப்புக் கொண்டுள்ளார்.
இதையடுத்து, சென்னை பாரிமுனையில் உள்ள ஒரு டீக்கடைக்கு ரூ.30 லட்சம் பணத்தை எடுத்து வர வேண்டும் என்று கடத்தல்காரர்கள், ஆபிரகாமிடம் கூறி அனுப்பி வைத்தனர். உடனடியாக, கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்துக்குச் சென்று இதுதொடர்பாக ஆப்ரகாம் புகார் கொடுத்தார்.
கடத்தல்காரர்களை பிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படை போலீஸார், ஆபிரகாம் கையில் பணம் இருப்பது போன்று பேப்பர் கட்டுக்களை வைத்து ஒரு பையை கொடுத்து அனுப்பினர். குறிப்பிட்ட டீக்கடை அருகே பணம் வாங்க வந்த கடத்தல் ஆசாமிகள் 2 பேரை தனிப்படை போலீஸார் மடக்கி பிடித்தனர்.
காரில் அமர்ந்திருந்த மற்ற 2 கடத்தல்காரர்களையும் பிடித்தனர். விசாரணையில், அவர்கள் புளியந்தோப்பை சேர்ந்த ராம்குமார் (23), திருவொற்றியூரை ஜெயகுமார் (26), ஜெய்சரவணன் (20), புதுச்சேரி செட்டிகுளம் குப்பத்தைச் சேர்ந்த பொன்னி வளவன் (25) என்பது தெரிந்தது.இதையடுத்து, அவர்கள் 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.