

கோப்புப் படம்
சென்னை: ரூ.63 லட்சம் தங்க மோசடி வழக்கில் புதிய திருப்பமாக கைதானவரின் வீட்டிலிருந்து ரூ.500 டம்மி நோட்டு கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சென்னை அமைந்தகரையைச் சேர்ந்த தங்க மொத்த வியாபாரி அன்மோல் ஜெயின் (24), தனது உறவினர் நமீத்துடன் இணைந்து தங்கத்தை வாங்கி விற்பனை செய்து வருகிறார்.
கடந்த 17-ம் தேதியன்று, எழும்பூர் பவுண்டன் பிளாசாவில் கடை நடத்தி வருவதாகவும், குறைந்த விலைக்கு தங்கம் விற்பதாகவும் கூறிய பெரம்பூரைச் சேர்ந்த சக்திவேல், அவரது தந்தை சாந்தகுமார் ஆகியோரிடம் தங்கம் வாங்க ரூ.63 லட்சத்தை வழங்கினார்.
ஆனால், அவர்கள் தங்கத்தை தராமல் ஒவ்வொருவராக தலைமறைவாகினர். இதுகுறித்து அன்மோல் ஜெயின் எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், எழும்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, மோசடிக்கு மூளையாக செயல்பட்டதாகக்கூறப்படும் சக்திவேல் (23), அவரது தந்தை சாந்தகுமார் (61), ராம் (23), ராம்குமார் (22), உதயகிரண் (22) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், சென்னை கொண்டித்தோப்பைச் சேர்ந்த பி.டெக் பட்டதாரி விஷ்வக் (21) என்பவரும் இந்த மோசடியில் தொடர்புடையவர் என தெரியவந்ததைத் தொடர்ந்து, அவரையும் போலீஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து இதுவரை ரூ.44.50 லட்சம் ரொக்கம் மீட்கப்பட்டுள்ளது. நீதிமன்றக் காவலில் புழல் சிறையிலிருந்த சாந்தகுமாரை போலீஸார் காவலில் எடுத்து விசாரித்தனர்.
அதன்பின், பெரம்பூரில் உள்ள அவரது வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், ரூ.500 மதிப்புள்ள டம்மி நோட்டுக் கட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கள்ளநோட்டுகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் வகையிலான இந்த டம்மி நோட்டுகளை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
சாந்தகுமாருக்கு கள்ளநோட்டு கும்பலுடன் தொடர்பு உள்ளதா, இந்த டம்மி நோட்டுகள் எங்கிருந்து கிடைத்தன, இதன் பின்னணியில் வெளிநாட்டு கும்பல்களின் தொடர்பு உள்ளதா என விசாரிக்கின்றனர். இந்த வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.