

முகேஷ், கண்ணன்
சென்னை: மதுரவாயல், சொக்கநாதன் நகரில் வசித்தவர் அன்றோனின் ஆவிஸ்மேன் (32). தற்போது பெங்களூருவில் தங்கி ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணி செய்து வருகிறார்.
இவரது பெற்றோரும் கடந்தாண்டு சொந்த ஊரான நாகர்கோவிலுக்கு சென்று விட்டனர். வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து கடந்த 12-ம் தேதி நள்ளிரவு அவரது வீட்டின் பூட்டை உடைத்து புகுந்த நபர்கள் பீரோவையும் உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த 16 பவுன் கொண்ட 14 தங்க மோதிரங்கள், 9 ஜோடி தங்க கம்மல்கள், 39 தங்க நாணயங்கள் மற்றும் பணம் ரூ.3 லட்சம் ஆகியவை திருடிவிட்டுத் தப்பினர்.
இதுகுறித்து மதுரவாயல் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸார் அப்பகுதி சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் திருவள்ளூர், காக்களூரைச் சேர்ந்த சகோதரர்கள் முகேஷ் (26) மற்றும் கண்ணன் (27) ஆகியோரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சகோதரர்கள் காஞ்சிபுரத்தில் இலை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். அதில் முன்னேற்றம் இல்லாததால் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு திருடியது தெரியவந்ததாக போலீஸார் கூறினர்.