

அப்ரார் அகமது
சென்னை: அண்ணாநகர் கிழக்கு முதலாவது அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் அஷ்ரப் நிஷா (68). முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த இவர், தனது மகன்கள் அப்ரார் அகமது (50), அஸ்ரார் அகமது (49) மற்றும் இளைய மகன் அசார் அகமது(42) ஆகியோருடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தார்.
இளைய மகன் அசார் அகமது பல் மருத்துவர் ஆவார். நேற்று முன்தினம் இரவு, வீட்டில் தனியாக இருந்த தாய் நிஷா மற்றும் மருத்துவர் அசார் அகமது ஆகிய இருவரும் தரையில் மயங்கிய நிலையில் கிடப்பதாக, மற்ற இரு சகோதரர்களும், 108 ஆம்புலன்ஸ் மற்றும் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், இருவரும் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து அண்ணாநகர் போலீஸார் உடல்களைக் கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்தவர்களின் உடலில் ஆங்காங்கே சிறு சிறு காயங்கள் இருந்ததைக் கண்ட போலீஸார், சந்தேக மரணம் என வழக்குப் பதிவுசெய்து விசாரணையைத் தொடங்கினர். விசாரணையின்போது சகோதரர்கள் இருவர் மீதும் போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
போலீஸாரின் தீவிர விசாரணையில் அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவந்தன. பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்களது குடும்பச் சொத்தை விற்பனை செய்து பங்கீடு செய்வதில் சகோதரர்களி டையே நீண்ட நாட்களாகத் தகராறு இருந்து வந்துள்ளது.
இதற்குத் தாய் நிஷாவும், தம்பி அசார் அகமதுவும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். சம்பவத்தன்று மாலை மீண்டும் இது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அப்ரார் அகமது மற்றும் அஸ்ரார் அகமது ஆகிய இருவரும் சேர்ந்து, தங்கள் தாய் மற்றும் தம்பியை அடித்துக் கொலை செய்துள்ளனர்.
கொலை செய்த பிறகு யாருக்கும் தெரியாதது போல வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்ற இருவரும், சில மணி நேரம் கழித்து மீண்டும் வந்து அவர்கள் மயங்கிக்கிடப்பதாக நாடகமாடியுள்ளனர்.
இந்த வழக்கில் அப்ரார் அகமது(50), அவரது மனைவி பசியா ஆஸ்மா(42) மற்றும் அஸ்ரார் அகமது(49) ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் அப்ரார் அகமதுவின் மகள், மகனை கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர்.