கள்ளக்குறிச்சி: விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் அருகில் உள்ள வீரசோழபுரம் கிராமம். இந்த கிராமத்தில் வசிக்கக்கூடிய ஊர் காவல் படையில் பணியாற்றி வரும் மூர்த்தி (47) மற்றும் அவரது மனைவி சரண்யா (42). இவர்களுக்கு இரு குழந்தைகள்.
தீபாவளிப் பண்டிகையையொட்டி, சரண்யா நேற்று காலை சமையலறையில் பலகாரங்கள் தயார் செய்து கொண்டிருந்தார். அப்போது அவருடன் வீட்டில் அவரது உறவினர்கள் சுமதி (37), பிரபு (38) மற்றும் அவரது 10 வயது பத்ரிநாத் ஆகியோர் இருந்தனர்.
திடீரென சமையல் சிலிண்டர் வெடித்தது. இதில் அவர்களது வீடு இடிந்து தரைமட்டமானது. சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திலேயே சிறுவன் பத்ரிநாத் உயிரிழந்தார். படுகாயங்களுடன் இருந்த சரண்யா, மூர்த்தி, சுமதி, பிரபுவை மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அரகண்டநல்லூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.