

சென்னை: எழும்பூரில் உள்ள மாநில காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் அழைப்பு ஒன்று வந்தது. எதிர்முனையில் பேசிய நபர், தன்னை வினோத்குமார் என அறிமுகம் செய்து கொண்டு, `முதல்வர் ஸ்டாலின் வீடு, அவரது காரில் வெடிகுண்டு வைத்துள்ளேன்.
அது சற்று நேரத்தில் வெடித்து சிதறும்' எனக்கூறி இணைப்பைத் துண்டித்தார். இதையடுத்து, ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதல்வர் வீட்டுக்குச் சென்று போலீஸார் சோதனை நடத்தினர். காரிலும் சோதனை நடைபெற்றது.
சந்தேகப்படும்படியான எந்த ஒரு பொருளும் கிடைக்காததால் புரளியைக் கிளப்பும் வகையில் மிரட்டல் விடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, போலீஸார் மிரட்டல் விடுத்த எண்ணை தொடர்பு கொண்டனர்.
அப்போது எதிர்முனையில் பேசிய நபர், ``என் பெயர் வினோத்குமார். நான் தாம்பரம் சேலையூர் கேம்ப் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு நின்று கொண்டிருக்கிறேன். அடையாளம் தெரியாத இருவர் என்னை பலமாக தாக்கினர்.
இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தும் போலீஸார் வரவில்லை. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தேன்'' என தெரிவித்தார். இதையடுத்து, போலீஸார் சேலையூர் விரைந்து மதுபோதையில் இருந்த வினோத்குமாரை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். பின்னர் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.