

பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் போலீஸாருக்கு ஆறுதல் தெரிவித்த மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர்.
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே போலீஸார் வேனில் அழைத்துச் சென்ற பிரபல ரவுடி வெள்ளைக்காளி மீது ஒரு கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்றது. இதில் 3 போலீஸார் காயமடைந்தனர். நாட்டு வெடிகுண்டு வீசிய கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
மதுரை காமராஜபுரம் முத்துராமலிங்க தேவர் தெருவைச் சேர்ந்தவர் காளிமுத்து என்ற வெள்ளைக் காளி (40). பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 8 கொலைகள், 7 கொலை முயற்சி, கஞ்சா கடத்தல் உட்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
2025 மார்ச் மாதம் மதுரையில் கிளாமர் காளி என்ற காளீஸ்வரனை கொலை செய்த வழக்கில் ரவுடி வெள்ளைக் காளி உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். சிறையில் இருந்தபடியே ஆட்களை ஏவி, கிளாமர் காளியை வெள்ளைக் காளி தரப்பினர் கொன்றதாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த வெள்ளைக் காளியை, குற்ற வழக்குகள் தொடர்பாக போலீஸார் திண்டுக்கல் மற்றும் புதுக்கோட்டை நீதிமன்றங்களுக்கு அழைத்துச் சென்றுவிட்டு நேற்று மீண்டும் சென்னை புழல் சிறைக்கு வேனில் அழைத்துச் சென்று கொண்டிருந்தனர். அந்த வேனில் காளி மற்றும் 10 போலீஸார் சென்றனர்.
வெள்ளைக் காளி
பெரம்பலூர் மாவட்டம் எறையூர் சுங்கச்சாவடி அருகே வேனை நிறுத்தி, ஒரு ஓட்டலில் சாப்பிடுவதற்காக வெள்ளைக் காளியுடன் போலீஸார் நடந்து சென்று கொண்டு இருந்தனர். அப்போது போலீஸ் வாகனத்தை பின்தொடர்ந்து 2 கார்களில் வந்த 15 பேர் கொண்ட கும்பல், திடீரென வெள்ளைக் காளி மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசியது. இதில், காளி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இந்த சம்பவத்தில் தென்காசி மாவட்டம் புளியங்குடியை சேர்ந்த வினேஷ்குமார் (37), சென்னை புதுப்பேட்டையை சேர்ந்த ராமச்சந்திரன்(54), மதுரை வாடிப்பட்டியைச் சேர்ந்த மருதுபாண்டி(30) ஆகிய 3 போலீஸார் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து, ஆயுதப்படை காவல் உதவி ஆய்வாளர் ராமசந்திரன் தனது துப்பாக்கியால் ரவுடிகளை நோக்கிச் சுட்டார். இதனால், அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடிவிட்டது.
பின்னர், காயமடைந்த 3 போலீஸாரையும், ரவுடி வெள்ளைக் காளியையும் போலீஸார் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சம்பவ இடத்தில் காவல் கண்காணிப்பாளர் அனிதா விசாரணை மேற்கொண்டார். வெள்ளைக் காளி மீது நாட்டு வெடிகுண்டு வீசியது கிளாமர் காளியின் கூட்டாளிகளாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக மங்களமேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
5 தனிப்படைகள் அமைப்பு: பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள போலீஸாரிடம் மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் நலம் விசாரித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வெள்ளைக் காளி மீது நாட்டு வெடிகுண்டு வீசிய கும்பலை நோக்கி காவல் உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
அவரது துணிச்சலான செயலால் அந்த கும்பல் கொலை முயற்சியை கைவிட்டுவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. அந்த கும்பல் குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவர்களைப் பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள். இவ்வாறு ஐ.ஜி. பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.