

சென்னை: சென்னை, புளியந்தோப்பு, கே.பி.பார்க் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வந்தவர் முருகன் (46). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு, திருமணமாகி மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர்.
மதுப் பழக்கத்துக்கு அடிமையானதால், முருகனின் மனைவி பிரிந்து சென்று விட்டாராம். இந்நிலையில், நேற்றுமுன்தினம் மாலை முருகன் அதே பகுதியில் காயமடைந்து கிடப்பதாக, அப்பகுதி மக்கள் அவரது அக்கா மகன் பவித்ரனுக்கு (32) தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக அங்கு விரைந்த பவித்ரன், காயங்களுடன் இருந்த முருகனை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அப்போது, மருத்துவர்களிடம் முருகன் மது போதையில் கீழே விழுந்து காயமடைந்ததாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி முருகன் நேற்று உயிரிழந்தார். இதற்கிடையே, முருகனின் சகோதரி, சகோதரி மகன் பவித்ரனிடம் போலீஸார் விசாரித்தனர்.
முதலில், மது போதையில் கீழே விழுந்து காயமடைந்ததாக தெரிவித்த அவர்கள், பின்னர் வேறு காரணங்களை கூறியதால்போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து, போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அதில், சம்பவத்தன்று முருகனும், பவித்ரனும் ஒன்றாக மது அருந்தி உள்ளனர். அப்போது, பவித்ரன் மது வாங்க மேலும் பணம் கேட்டதால் ஏற்பட்ட வாக்குவாதம் தகராறாக மாறியுள்ளது.
இதில், ஆத்திரமடைந்த பவித்ரன், தனது மாமா முருகனை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த முருகன் பின்னர் உயிரிழந்தது விசாரணையில் உறுதியானது.
மேலும், சம்ப வத்தை மறைப்பதற்காக அவர் கீழே விழுந்து காயமடைந்ததாக கூறி, மருத்துவமனையில் சேர்த்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, முதலில் சந்தேக மரணம் என பதிவு செய்த வழக்கை போலீஸார் கொலை வழக்காக மாற்றி,பவித்ரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.